70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தேர்தல் நடைபெற்றது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பிடிக்கும் என்பதால் அக்கட்சி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, "ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே இடைவெளி உள்ளது, தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது. முடிவுகள் முழுவதுமாக அறிவிக்கப்பட இன்னும் அதிக நேரம் உள்ளது. முடிவுகள் என்னவாக இருந்தாலும், மாநில தலைவர் என்ற முறையில் பொறுப்பேற்பேன்" என்றார்.
கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பு இதேபோல கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினரும் டெல்லி பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவருமான கவுதம் கம்பீர் கூறுகையில், "டெல்லி தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மக்களுக்கும் வாழ்த்துகள். நாங்கள் எங்களால் முடிந்தவரை பணியாற்றினோம். ஆனால் டெல்லிவாசிகளின் மனதை மாற்ற எங்களால் முடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையில் டெல்லி வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: டெல்டா விவகாரம் - நாடாளுமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு