கரோனாவால் ஒட்டுமொத்த இந்தியாவே முடங்கி கிடக்கிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று கூறி நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டத்திலிருக்கும் கரோனா மூன்றாம் கட்டமான சமூகப் பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக மக்கள் பொது இடங்களில் கூடக்கூடாது, விழாக்கள் நடத்தக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன. ஆனாலும் உத்தரவை மதிக்காமல் இளைஞர்கள், இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்து கொண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் அலட்சியமாக இருக்கின்றனர்.
இது ஒருபுறம் என்றால் மக்கள் பிரதிநிதிகளோ ஒருபடி மேலே சென்று, ஊரடங்கை ஒரு பொருட்டாக மதிக்காமல் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகின்றனர். அப்படியானதொரு தரமான சம்பவத்தைதான் அரங்கேற்றியுள்ளார் கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ.
கர்நாடகாவில் ஆளும் அரசான பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மசாலா ஜெயராம். இவருக்கு நேற்று 51ஆவது பிறந்தநாள். பொதுவாகவே அரசியல் பிரமுகர்களின் பிறந்தநாள் என்றாலே ஜாம் ஜாமென்று கொண்டாடப்படும். அரசியல்வாதியின் ஆதரவாளர்களுக்கு பிரியாணி, மது என தடபுடலாக விருந்துகள் படைக்கப்படுவதும் வழக்கமானதே. அதேபோலவே ஜெயராமும் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட எண்ணியுள்ளார்.