2012ஆம் ஆண்டு டெல்லியில் இரவு நேரத்தில் பேருந்து ஒன்றில் ஏறிய டெல்லி மருத்துவ மாணவி, அந்தப் பேருந்தில் இருந்த ஆறு பேரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சாலையில் தூக்கிவீசப்பட்டார். இந்த விவகாரம், நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் சிங் தாக்கூர், பவன் குப்தா, ராம் சிங் திஹார், ஒரு சிறுவன் என ஆறு குற்றவாளிகளைக் காவல் துறை கைதுசெய்து சிறையிலடைத்தது.
முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம் சிங் திகார் சிறையில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். ஆகஸ்ட் 31ஆம் தேதி நிர்பயா வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார்.
நிர்பயா வன்கொடுமை தொடர்புடைய முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. எனினும், தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நான்கு பேரும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அவர்களின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இதனை எதிர்த்து நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனுவில், அவர்களின் தூக்கு தண்டனையை உறுதிசெய்து 2017 மே 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.