டெல்லியில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவியை ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த வழக்கில் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த நால்வருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், ஒருவர் மாற்றி ஒருவராக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ததால் தண்டனை, நிறைவேற்றுவதில் சட்டசிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, குற்றவாளிகளுள் ஒருவரான வினய் குமார் சர்மா தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மனு அளித்திருந்தார். இந்த மனுவை குடியுரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்.
இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வினய் குமார் சர்மா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, வினய் குமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏபி சிங், திஹார் சிறையில் குற்றவாளி சட்டவிரோதமாக சித்ரவதை செய்யப்பட்டதாகவும், அவருக்கு உரிய மருத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வாதாடினார். மேலும், வினய் குமாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
பிறகு, டெல்லி அரசு சார்பாக ஆஜரான அரசு துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மெஹ்தா, "அவர் (வினய் குமார்) தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை. அவரது கருணை மனுவை குடியுரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்பதால், அதுகுறித்து பரீசிலிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை" என வாதாடினார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், குற்றவாளி ஆரோக்கியமாக உள்ளார் என்பதால், அவருடையே வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க :பிப்ரவரி 20ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்