தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி மக்களின் வாழ்க்கையை மத்திய விஸ்டா திட்டம் மேம்படுத்தும் - அமைச்சகம் தகவல்!

டெல்லி : சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துவரும் மத்திய விஸ்டா திட்டமானது பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டு துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லி மக்களின் வாழ்க்கையை மத்திய விஸ்டா திட்டம் மேம்படுத்தும் - அமைச்சகம் தகவல்!
டெல்லி மக்களின் வாழ்க்கையை மத்திய விஸ்டா திட்டம் மேம்படுத்தும் - அமைச்சகம் தகவல்!

By

Published : Jul 21, 2020, 11:47 PM IST

டெல்லி நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களை ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் சீரமைப்பு செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் அழைக்கப்படும் இத்திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது.

இந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் குஜராத்தைச் சேர்ந்த எச்.சி.பி. டிசைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது. டெல்லி இந்தியா கேட் தொடங்கி குடியரசு தலைவர் மாளிகை இடையே இந்த சென்ட்ரல் விஸ்டா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய நாடாளுமன்றமும், 2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் மத்திய அரசின் பொது தலைமை செயலகமும் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜிவ் சூரி என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

அம்மனுவில், "டெல்லியின் மிக முக்கிய இடமான மத்திய பகுதியில் இந்தத் திட்டத்திற்காக 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதனால் ஏராளமான மரங்கள் அழிக்கப்படும். ஏற்கனவே, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, மேலும் பாதிப்பு அடையும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை21) உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வுக்கு முன்பு காணொலி வாயிலாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, மத்திய பொதுப்பணித் துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அவ்வறிக்கையில், " தற்போதைய நாடாளுமன்றம் இயங்கிவரும் கட்டடத்தில் அதிக உறுப்பினர்கள் அமர்வதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. 100 ஆண்டுகள் பழமையான அக்கட்டடத்தின் இட அமைவும், தொழில்நுட்ப வசதிகளும் போதுமானதாக இல்லை. அதன் அமைப்பிடம் பூகம்ப தடுப்பு எச்சரிக்கை விதிகளைப் பின்பற்றும் வகையில் இல்லை.

தீ விபத்து விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் கட்டடம் வடிவமைக்கப்படவில்லை என்பதால் தீவிபத்து அச்சம் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. எனவேதான் தற்போதை நாடாளுமன்ற கட்டடத்திற்கு விரிவான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என அமைச்சகம் கருதுகிறது.இந்தத் திட்டம் சீரமைக்கும் திட்டமேயாகும். இடத்தை மாற்றுவதல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மின்சாரம், பிளம்பிங், பொது போக்குவரத்துடன் சிறந்த இணைப்பு போன்ற விரிவான வசதிகளை வழங்குவதே நோக்கம். கோவிட்-19 நிலைமை என்பது தற்காலிகமானது. பொது சமூகத்தையே மேம்படுத்தும் அரசின் நீண்டகால திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.

மனுதாரர் கூறியதுபோல் மத்திய அரசு உடனடியாக ரூ .20,000 கோடியை முதலீடு செய்யப்போவதில்லை. இந்த மொத்த செலவினமும் சுமார் ஆறு வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. இவ்வசதிகள் மேம்பட்டால் உறுப்பினர்களின் தங்கும் விடுதிக்கான கணிசமான செலவுகள் மிச்சப்படுத்தப்படும்.

அதே வேளையில், இந்த மத்திய விஸ்டா திட்டமானது அதிகரித்துவரும் டெல்லியின் நிர்வாக செயல்பாட்டின் செயல்திறன் மற்றும் பொது மக்களின் அன்றாட வாழ்வை எளிதாக்கும்" என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நீதிமன்றம் வழக்கின் மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. கரோனா வைரஸ் நோய்தொற்றால் நாடு முழுவதும் மக்கள் வாடிவரும்போது கட்டடங்களைப் புதுப்பிக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதை சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details