புதுடெல்லி: இந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் மூன்று தூதரக ரீதியிலான நியமனங்கள், ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் சமீபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக முக்கியமான திட்டமிட்ட நடவடிக்கை என்றும், கிழக்கில் உள்ள அண்டை நாடுகளுடன் நட்புறவை விரிவாக்குவது, ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் தலிபான்களின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
இந்தியா நியமித்த புதிய தூதர்கள் யார் யார்?
வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலராக (சர்வதேச அமைப்புகள் மற்றும் உச்சிமாநாடுகள்) பணியாற்றிய விக்ரம் துரைசாமி, வங்கதேச நாட்டுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜகர்தாவிலுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ஆசியான்) இந்திய தூதராகப் பணியாற்றிய ருத்ரேந்திர தாண்டன், ஆப்கானிஸ்தானுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் கௌரங்லால் தாஸ், தைவானில் உள்ள இந்திய-தைவான் கூட்டமைப்பின் புதிய இயக்குநராகவும் அந்நாட்டின் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மூன்று நியமனங்களும், லடாக்கில் சீனா உடனான இந்தியாவின் எல்லைப் பிரச்னை, தெற்கு ஆசியா, தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் ஆகிய பகுதிகளில் சீனாவின் மேலாதிக்க அணுகுமுறை, ஆப்கானிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதிகரிக்கும் தலிபான்களின் பங்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.
வங்கதேசத்தைக் கவர்ந்திழுக்கும் சீனா
தெற்கு ஆசியாவில் தமது கால்தடத்தைப் பதித்து, எல்லையை விரிவாக்கும் எண்ணத்தில் வங்கதேசத்தைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுவருகிறது. இந்தச் சூழலில் வங்கதேச நாட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள துரைசாமி 1992ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவை அலுவலராகப் பணியில் சேர்ந்தவராவார்.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அண்டை நாடுகளுடன் சீனா பாதுகாப்பு சார்ந்த திட்டங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. பெக்குவாவில் பிஎன்எஸ் நீர்மூழ்கி கப்பல் தளத்தை சீனா அமைத்துவருகிறது. அதே சமயம், வங்கதேச கடற்படைக்கு இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனா அளித்திருக்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் விருப்ப திட்டமான ‘பெல்ட் மற்றும் சாலை (பிஆர்ஐ) திட்டத்தை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஏற்றுக்கொண்டதுதான் இந்தியாவின் இன்னொரு கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியான சீனா-பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழித்தடமானது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே செல்வதால், இத்திட்டத்தில் பங்குபெற இந்தியா மறுத்துவிட்டது.
வங்கதேசத்தின் செயல்பாடுகளால் கவலை கொண்டிருக்கும் இந்தியா
சிறிய நாடுகளைக் கடன் வலைக்குள் தள்ளும் வகையில் சீனாவின் பிஆர்ஐ திட்டம் இருப்பதாக பல்வேறு உலக நாடுகள் விமர்சித்துவருகின்றன. தெற்கு ஆசிய நாடுகளில் வங்கதேசத்துடன் இந்தியா நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ள நிலையில், வங்காள விரிகுடாவில் தம்முடைய கடல் மேலாண்மை திட்டங்களில் சீனாவுக்கு உதவுவதாக அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி முகமை, சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளித்திருப்பது, இந்தியாவின் கவலைக்கு மற்றுமொரு காரணமாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்த ஷேக் ஹசீனாவுடன், மூன்று திட்டங்களிலும் ஏழு ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட்ட பின்னர்தான் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
இதில், இந்தியாவிலிருந்து குறிப்பாக வடகிழக்கு இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்குச் செல்லும், அங்கிருந்து இந்தியா வரும் கப்பல்கள் அந்நாட்டின் சாட்டோகிராம், மோங்லா ஆகிய துறைமுகங்களை உபயோகித்துக் கொள்வதற்கான ஒப்பந்தமும் அடங்கும்.
மேலும், திரிபுரா மாநிலத்தின் சோனாமுரா, வங்கதேசத்தின் தத்காந்தி இடையே நீர்வழி வணிகச் செயல் திட்டத்தை அமல்படுத்த அந்நாட்டுக்கு 800 கோடி டாலர் கடன் தருவதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இருநாட்டு மக்கள் தொடர்பை மேம்படுத்தவும், வர்த்தக இணைப்பை விரிவாக்கவும் ரயில் சேவை மற்றும் இதர தொடர்புகளை மீட்டெடுப்பதற்கும் இரு நாடுகளும் பணியாற்றிவருகின்றன.
வங்கதேசத்திலிருந்து திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி செய்தல், தாகாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷினில் ஒரு விவேகானந்த பவன் (மாணவர் விடுதி) அமைத்தல், குல்னாவிலுள்ள வங்கதேச டிப்ளோமா பொறியாளர்கள் மையத்தில் வங்கதேச-இந்தியா தொழில்முறை திறன் மேம்பாட்டு மையத்தை அமைப்பது என்ற மூன்று திட்டங்களைச் செயல்படுத்த இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன.
விக்ரம் துரைசாமியின் நியமனத்திற்கான காரணம் இதுதான்
இதுபோன்ற காரணங்கள்தான் வங்கதேச தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துடன் நெருக்கம் காட்டிவரும் சீனாவின் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. மாண்டரின், பிரஞ்ச் ஆகிய மொழிகளில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் துரைசாமி, டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் இணைச் செயலராகப் பணியாற்றியவர். இதுதவிர இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.