நேபாளம் நாட்டின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, சமீபத்தில் இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் திருத்தப்பட்ட புதிய வரைப்படத்தை வெளியிட்டார். மேலும், இந்தியாவை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளையும் கூறியிருந்தார்.
தொடர்ந்து மாநாடு ஒன்றில் பேசிய அவர், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைப்படத்தை வெளியிட்ட காரணத்தினால் இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டினார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த பல மூத்தத் தலைவர்கள், இந்தியா குறித்து அவதூறு கருத்து பேசிய குற்றத்திற்காக உடனடியாக ஒலி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் அங்கு ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டு, சொந்தக் கட்சிக்குள் பிரதமர் ஒலிக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. கடந்த வாரம் அக்கட்சி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற 44 நிலைக்குழு உறுப்பினர்களில் 31 பேர் ஒலிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்தத் தலைவர்களான மாதவ் நேபாள், ஜல்நாத் கானல், பாம்தேவ் கௌதம், புஷ்பா கமல் தஹால் ஆகியோர் ஒலி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் அல்லது இந்தியா மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.