டெல்லி:தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 1,140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜை சந்தித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதி அனுப்பிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் கொடுத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மத்திய கால்நடைத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள், நிதி தேவை தொடர்பாக முதலமைச்சர் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவரிடம் வழங்கினேன்.
குறிப்பாக தமிழ்நாட்டில் 2019ஆம் மட்டும் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு தரப்பிலும் 60 விழுக்காடு நிதி வழங்கப்படுகிறது. இதேபோல் சேலம் மாவட்டம் தசலைவாசல், தேனி மாவட்டம் வீரபாண்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளில் புதிய கால்நடை கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
அதற்காக, மத்திய அரசு 60 விழுக்காடு நிதியினை கொடுக்க வேண்டும் எனவும், மேலும் தமிழ்நாட்டிலுள்ள கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 1,140 கோடி ரூபாய் நிதியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தேன். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை விரைவில் பரிசீலனை செய்து தகவல் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.