ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைமையகமான நவ-இ-சுபாவில் அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் தலைமையில் உயர்மட்ட கூட்டம் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, பொதுச் செயலாளர் அலி முகமது சாகர், முஸ்துஃபா கமல், அப்துல் ரஹீம் ரத்தர் முகமது ஷாஃபி யூரி, முகமது ரம்ஜான், மெயின் அல்தாஃப், மிர் சைபுல்லா உள்ளிட்ட உறுப்பினர்கள் நேரில் பங்கேற்றனர்.
ஜம்முவிலிருந்து அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழுவைச் சேர்ந்த சகீனா இட்டூ, ஷமீமா ஃபிர்தௌஸ், நிசார் அஸ்லம், ஆகா ருஹுல்லா, கமர் அலி அகூன், ஹனீபா ஜான், ஷமி ஒப்ராய் ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் வீட்டுச்சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் ஏறத்தாழ ஓராண்டு கழித்து ஒன்றுக்கூடியது அங்குள்ள மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.