மகாராஷ்டிராவில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. சிவசேனாவுக்கு நேற்று வரை ஆதரவு அளித்து வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, இன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு தற்போது விடையளிக்கும் விதமாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் நவாப் மாலிக் பேசியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களிடம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து வாங்கி, அதனை தவறாகப் பயன்படுத்தி அஜித் பவார் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்” என்று கூறியுள்ளார். முன்னதாக, பாஜக ஆட்சியமைத்ததற்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமில்லை என்று சரத் பவார் கூறியிருந்தார்.