மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மறுமுனையில், சிவசேனாவும் பாஜகவும் களம் காணுகின்றன. ஆனால், சிவசேனா - பாஜக கூட்டணி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில், தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகளை முடக்கும் வகையில், சரத் பவார் மீதும் அவரது உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான அஜித் பவார் மீதும் ரூ. 25,000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
தேசிய அளவில் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்படும் சரத் பவார் மீதான இந்த திடீர் ஊழல் வழக்கு பெரும் சர்ச்சையாக மாறியது. அவரது தொண்டர்கள் கொதித்தனர். ஆனால், பவார் பொறுமை காத்தார். அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் செல்வதாக நேற்று காலை அறிவித்தார்.
உடனே அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து சராத் பவாரின் வீட்டிற்குச் சென்ற மும்பை மாநகர காவல் ஆணையர், அவருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் வெளிவந்த சரத் பவார், ‘அமலாக்கத்துறை அலுவலகத்துச் சென்று இந்த வழக்கில் என் பெயர் எதற்காக சேர்க்கப்பட்டது என்று கேட்க நினைத்தேன். ஆனால், மும்பை மாநகர காவல் ஆணையர் என் வீடு தேடி வந்து இப்போது அங்கே சென்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறினார். அதனால் அமலாக்கத்துறை அலுவலகம் செல்லும் திட்டத்தை கைவிடுமாறும் வேண்டிக்கொண்டார்.
நானும் இந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவன் என்பதால், மக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதை உணர்ந்திருக்கிறேன். மேலும் அமலாக்கத்துறையிடம் இருந்தும், இப்போதைக்கு எங்கள் அலுவலகத்துக்கு தாங்கள் வரவேண்டாம் என்று தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து நான் இன்று அமலாக்கத்துறை அலுவலகம் செல்லும் திட்டத்தை ரத்து செய்துவிட்டேன். தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி” என்றார்.
தேர்தல் நேரத்தில் சரத் பவாருக்கு நெருக்கடி கொடுத்தால் எதிர்க்கட்சிகளின் வெற்றி சதவீதத்தை குறைக்கலாம் என்று நினைத்த பாஜகவுக்கு, தனது அரசியல் சாதுர்யத்தால் தக்க பதிலடி கொடுத்துள்ளார் பவார் என்று அவரது தொண்டர்கள் சிலாகித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:அமலாக்கத்துறை அலுவலகம் செல்லும் சரத் பவார் - மும்பையின் சில பகுதிகளில் 144 தடை!