நாடு முழுவதும் கோவிட்-19 பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பலருக்கும் பேருதவியாக இருப்பது தொழில்நுட்பம்தான். வங்கிச் சேவை, மருத்துவச் சேவை என அத்தியாவசிய தேவைகள் முதல், நேரத்தைக் கழிக்க இணையத்தை உபயோகிப்பது வரை அனைத்திற்கும் நாம் தொழில்நுட்பத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளோம்.
இந்த 2020ஆம் ஆண்டுதான் தொழில்நுட்ப தினத்தை நாம் அதற்கு உரித்தான தொழில்நுட்பத்துடன் இணைந்து கொண்டாடிவருகிறோம். இப்படி நம் வாழ்வில் ஒன்றிப்போன தொழில்நுட்பத்திற்கு என்று ஒரு நாள் இருப்பது பலருக்குத் தெரியாது. அப்படித் தெரிந்துவைத்திருப்பவர்களுக்கும் ஏன் மே 11ஆம் தேதி இந்த தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது என்பது தெரியாது.
மே 11 காரணம் என்ன?
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு 1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் ஆபரேஷன் சக்தி என்ற அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஆபரேஷன் சக்தியின் வெற்றியையடுத்து ஆண்டுதோறும் மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் இந்திய விஞ்ஞானிகளின் அற்புத சாதனைகளையும் பங்களிப்பையும் சிறப்பிக்கும் வகையில் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சாதிக்க ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் நடைபெற்ற மற்ற முக்கிய நிகழ்வுகள்
ராஜஸ்தான் பொக்ரானில் அணுகுண்டு சோதனைகள் நடைபெற்ற அதே நேரம், இரண்டு இருக்கைகளைக் கொண்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானமான ஹன்சா-3 பெங்களூருலிருந்து பறக்கவிடப்பட்டது.
1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) திரிஷூல் ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. நிலத்திலிருந்து செலுத்தக்கூடிய இந்த ஏவுகணை குறுகிய தூரத்தில் இருக்கும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை படைத்தது. அதன்பின் இந்தத் திரிஷூல் ஏவுகணை இந்திய விமானப்படையிலும் இந்திய ராணுவத்திலும் இணைத்துக்கொள்ளப்பட்டது.
கரோனா காலத்தில் டிஜிட்டலின் முக்கியத்துவம்
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராட உலக சுகாதார அமைப்பிற்குத் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி உலகின் சிறந்த 30 தொழில்நுட்ப வல்லுநர்கள் காணொலி மூலம் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக எப்படிப் போராடலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.
கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராட அனைத்து நாடுகளும் முடிந்தவரை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புவேண்டுகோள்விடுத்துள்ளது. அதன்படி சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவிட்19 தொற்றை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவந்தது.