நண்பர்களுடன் எப்போதும் இருப்பவர்களுக்கு தினமும் நண்பர்கள் தினம்தான். இருப்பினும், நட்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு இன்று (ஆகஸ்ட் 2) நட்பு தினம் கொண்டாடப்படுகிறது.
நட்பு என்பது சாதி, மதம், பேதங்களைக் கடந்து அமையக்கூடிய ஒன்று. இந்த நட்புக்கு ஆண், பெண் தெரியாது. ரத்தத்தையும், பணத்தையும் பார்க்க தெரியாது. சொந்தங்களுக்கு கொடுக்கும் மதிப்பை விட நட்புக்கு அளிக்கப்படும் மதிப்பு மிகப் பெரியது. நட்பு என்பது நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ளும் ஒரு உறவாகும். இப்படிப்பட்ட நட்பு உங்களுக்கும் கிடைத்திருந்தால் நீங்கள் அதிருஷ்டசாலி தான்.
நல்ல நட்பைக் கொண்டாட எப்படி நட்பு தினம் உருவானது?
முதலில் நட்பு தினம் ஹால்மார்க் வாழ்த்து அட்டைகளின் விற்பனைக்காகக் கொண்டுவரப்பரட்டது. பின்னாட்களில் யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ், 1935 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை அளித்து தேசிய நட்பு தினமாக அறிவித்தது. அன்று முதல் தேசிய நட்பு தினம் வருடந்தோறும் கொண்டாடப்பட்டுவருகிறது.
நட்பு தினத்தின் முக்கியத்துவம் என்ன?
- மனிதர்களிடையே அன்பையும் சமாதானத்தையும் வளர்ப்பதற்கு இந்த நாள் உதவுகிறது.
- தங்களது நட்புகளுடன் மகிழ்ச்சிகளையும், கவலைகளையும் இந்த நாளில் பகிர்ந்து கொள்ளலாம்.
- நண்பர்கள் நம்மை வழிக்காட்டுகிறார்கள், வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கடந்து செல்ல கற்றுக் கொடுக்கிறார்கள்.
- நம் வாழ்வில் முக்கிய அங்கமாக இருக்கும் நபர்களைச் சிறப்பிக்க உதவுகிறது இந்த நாள்.
- அன்பு, அக்கறை, பாசம், கோபம் என ஒருசேர கலந்துள்ள இரு நபர்களின் உறவைப் போற்றுகிறது இந்த நாள்.
- வாழ்க்கையில் நம்மை மீட்டெடுத்துள்ள நண்பர்களுக்கான நாள்.
கரோனாவிற்கு மத்தியில் நட்பு தினம்? எப்படி கொண்டாடுவது?
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பெருந்தொற்றுக்கு மத்தியில் தனிமனித இடைவெளியுடன் கொண்டாடினால், நமக்கும் நல்லது, நம்முடைய நண்பர்களுக்கும்; நட்புக்கும் நல்லது.
நட்பு பாராட்ட தூரம் எல்லாம் ஒரு காரணமா? நட்பில் தூரங்கள் துறந்து போகும் என்பார்கள். அதனால் தொலைவில் இருக்கும் நண்பர்களோடு நட்பு பாராட்ட அன்பான குறுஞ்செய்திகள், வாழ்த்துகள், படங்கள் அனுப்பியோ அல்லது வீடியோ, ஆடியோ கால் மூலம் அழைத்து அன்பைப் பகிரலாம்.
நட்பு தினத்தை எவ்வாறு கொண்டாடுவது?
வாழ்த்து மடல்கள், பூக்கள், பரிசை பரிமாறிக் கொள்வது
பிரண்ட்ஷிப் பேண்ட் பரிமாறிக் கொள்வது
நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது
நம் புகைப்புடத்துடன் நண்பர்கள் புகைப்படத்தைப் பகிர்வது
அவர்களுக்கு பிடித்தமான ஒன்றைப் பரிசளிப்பது
மலரும் நினைவுகளை நினைவுப்படுத்தி மகிழ்ச்சிப்படுத்துவது
சரி பிரபலமானவனர்கள் நட்பைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?
ஏ.பி.ஜே . அப்துல் கலாம்
ஒரு சிறந்த புத்தகம், நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம், ஒரு நல்ல நண்பர் ஒரு நூலகத்திற்குச் சமம். பழைய நண்பர்கள் தங்கம், புதிய நண்பர்கள் வைரம். இதில் வைரம் கிடைத்துவிட்டது என்று தங்கத்தை மறக்கக் கூடாது. ஏனென்றால், வைரத்தைத் தங்கத்தால் மட்டுமே தாங்க முடியும்.
அன்னை தெரசா