புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் புதுச்சேரி உப்பளம் சாலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவுத் திரட்டினர். கூட்டணிக் கட்சியான திமுக வடக்கு மாவட்ட அமைப்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள், திமுக வடக்கு மாவட்ட அமைப்பாளர் சிவக்குமாரை சந்தித்து ஆதரவு திரட்டினர். தொடர்ந்து தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிவாவை சந்தித்தும் ஆதரவுத் திரட்டினர். இந்நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.