தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரசிலிருந்து நீக்கம்!

By

Published : Jan 25, 2021, 12:27 PM IST

Updated : Jan 25, 2021, 3:05 PM IST

minister
minister

12:24 January 25

புதுச்சேரி: பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நீக்கப்படுவதாக புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி சார்பில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அத்தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், டெல்லி மேலிட உத்தரவின்படி நாராயணசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இரண்டாம் இடமான பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பதவிகள் நமச்சிவாயத்திற்கு வழங்கப்பட்டன. கட்சி கொள்கை படி இரண்டு பதவிகளில் இருக்கக்கூடாது என்கிறபடியால், கடந்த ஆண்டு அவரிடமிருந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாகவே நமச்சிவாயம் கட்சி நிகழ்ச்சிகளில் பட்டும் படாமலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நமச்சிவாயம், ”நான் மாற்று கட்சியில் இணைவேன். அதற்காக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்வேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இதையடுத்து நமச்சிவாயத்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சியின் மாநிலத்தலைவர் ஏ.வி.சுப்ரமணியம் இன்று அறிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நமச்சிவாயம், கட்சி உத்தரவை மீறி செயல்படுவதால், அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.

இதனிடையே, சபாநாயகர் சிவக்கொழுந்துவை நேரில் சந்தித்து, அமைச்சர் நமச்சிவாயம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். ஊசுடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தீப்பாய்ந்தானும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க:'பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி': முதலமைச்சர் நாராயணசாமி 

Last Updated : Jan 25, 2021, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details