உத்தரப் பிரதேச மாநிலம் டோரியா சட்டப்பேரவை தொகுதியின் 74 வயது உறுப்பினர் மனோஜ் திவாரி. இவர் சமீபத்தில் தனது தொகுதியில் சிலருடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர், “எல்லாரும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். யாரும் இஸ்லாமியர்களிடமிருந்து காய்கறிகளை வாங்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். இவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தக் காணொலி இணையத்தில் வைரலானது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் எனது தொகுதியில் 10-12 பேரிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்களில் சிலர் இஸ்லாமிய வியாபாரிகள் தீநுண்மியைப் பரப்பும் நோக்கில் காய்கறிகளில் எச்சில் துப்பி விற்பனைசெய்கின்றனர்.
அதற்குத்தான் நான் இஸ்லாமியர்களின் கடைகளில் காய்கறிகள் வாங்க வேண்டாம் என்றேன். இதற்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக என்ன கூற முடியும். நான் கூறியதில் என்ன தவறு இருக்கிறது, ஏன் இதைப் பெரிய விஷயமாக்குகிறீர்கள்?” என்று தனது தரப்பு கருத்தை நியாயப்படுத்தும்விதமாகப் பேசினார்.