புதுச்சேரி மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் (PCA) 1968ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில விளையாட்டு ஆணையத்தில் 36 அணிகளும் 720 விளையாட்டு வீரர்களும் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் வசித்துவரும் தனியார் முதலாளிகளால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி (CAP) பல்வேறு முறைகேடுகள் மூலம் புதுச்சேரி மாநில விளையாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2008 முதல் 2018 வரை புதுச்சேரி மாநில ஆணையத்திற்கும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரிக்கும் எவ்வித கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தாமல் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரியில் படித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருக்கும் கிரிக்கெட் பாண்டிச்சேரி அணியில் விளையாட அனுமதிக்காமல், வடமாநில வீரர்களுக்கு பொய்யான போலி ஆவணங்கள், சான்றிதழ்களைப் பெற்றுத்தந்து விளையாடும் வாய்ப்பினை உருவாக்கி கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நிர்வாகிகள் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு துரோகத்தைச் செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி முதலமைச்சர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளித்தபோது எனவே, கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி பதிவினை ரத்து செய்து புதுச்சேரி மாநிலம் விளையாட்டு ஆணையம் ஏற்று நடத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் முதலமைச்சர் நாராயணசாமியிடம் வலியுறுத்தியுள்ளனர்.