இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இவர் பல சாதனைகளை புரிந்தவர். டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக முரளிதரனை நியமிக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச முடிவெடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்படவுள்ள மூன்று புதிய ஆளுநர்களில் முத்தையா முரளிதரனும் இருப்பார் என்று கூறப்படுகிறது.
கோத்தபய ராஜபக்சவுடன் முத்தையா முரளிதரன் இலங்கை அதிபர் தேர்தலின்போது கோத்தபய ராஜபக்சாவிற்கு ஆரம்பம் முதலே ஆதரவாக முரளிதரன் இருந்துவந்தார். கோத்தபய ராஜபக்ச, 2005 முதல் 2015ஆம் ஆண்டுவரை ராணுவ அமைச்சராக பதவி வகித்தபோதுதான் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடத்தப்பட்டது. ஆனால் இதுபோன்று போர் குற்றங்கள் நடக்கவில்லை என முரளிதரன் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு முத்தையா முரளிதரன் ஆளுநராக அறிவிக்கப்படவுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'இருத்தரப்பு உறவில் இது ஒரு புதிய அத்தியாயம்' - கோத்தபயவின் வாழ்த்து கடிதத்தில் ஜி ஜின்பிங்