கரோனா பெருந்தொற்றால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வரும் போது விமானங்களில் சமூக இடைவெளி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், விமானங்களின் நடு இருக்கைகளை காலியாக வைக்க உத்தரவிடுமாறும் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானி தேவன் கனானி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், நடு இருக்கைகளை காலியாக வைத்து விமானங்களை இயக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஏர் இந்தியா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்க அமர்வு முன்பு காணொலி காட்சி மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜூன் 16ஆம் தேதி வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "வெளியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, விமானங்களில் தோளோடு தோல் பயணிக்க அனுமதிப்பது ஏற்புடையதல்ல. விமான நிறுவனங்கள் மீது காட்டும் அக்கறையை, அரசு குடிமக்களின் ஆரோக்கியம் மீதும் காட்ட வேண்டும்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள பயணிகளைக் கொண்டுவரும்போது நடு இருக்கைகளைப் பயன்படுத்த ஜீன் 6ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்படுகிறது" எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, உள்நாட்டுப் பயணிகள் விமானச் சேவை நேற்று முதல் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையைப் புறக்கணித்த விமானியே விபத்துக்குக் காரணம்!