நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிதீவிரம் அடைந்துவந்தாலும், தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மீட்பு விகிதம் 77.88 விழுக்காடாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 78 ஆயிரத்து 399 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து இரண்டாயிரத்து 595 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கான மேலாண்மை நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கரோனா தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகள் சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை புண் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளையும் தொடர்ந்து காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான அணுகுமுறையை மத்திய அரசு தயாரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு பூர்ண குணமடைந்தபோதிலும், முகமூடி, கை மற்றும் சுவாச சுகாதாரம், தகுந்த இடைவேளி ஆகியவற்றை கடைப்பிடித்தல் வேண்டும்.
போதுமான அளவு வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும், ஆயுஷின் தகுதிவாய்ந்த பயிற்சியாளரின் பரிந்துரைப்படி நோய் எதிர்ப்பு சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். உடல்நலம் அனுமதித்தால், வழக்கமான வீட்டு வேலைகள் செய்யலாம்.