மக்களவைத் தேர்தல் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதன்பின்னர், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஈடிவி பாரத் பிரத்யேக பேட்டி எடுத்துள்ளது.
அப்போது, நாம் எழுப்பிய பலதரப்பட்ட கேள்விகளுக்கு மோடி அளித்த பதில்களை காணலாம்...
ஈடிவி பாரத்:உங்கள் அரசின் உச்சபட்ச சாதனை என்ன?
- பிரதமர் மோடி: கடந்த அரசுகள் குறிப்பிட்ட இரண்டு மூன்று துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளன. உதாரணமாக கடந்த மன்மோகன் சிங் அரசு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தையே பிரதானமாக கவனம் செலுத்தியது. ஆனால் எனது தலைமையிலான அரசு எந்தத் துறையும் விடுபடாத வகையில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டது. சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மூன்று முழக்கங்களின் மீது நம்பிக்கைகொண்டு மக்களின் நலனுக்கான முடிவுகளை எடுத்துள்ளது.
ஈடிவி பாரத்:கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் மேற்கொண்ட திருப்திகரமான சீர்திருத்தம் என்ன?
- பிரதமர் மோடி:2014ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த முந்தைய ஆட்சியாளர்கள் மீது இருந்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் நாட்டு மக்கள் அதிருப்தியான மனநிலையில் காணப்பட்டனர். ஆனால் தற்போது மக்களுக்கு அரசு மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையும் நன்மதிப்பும் உருவாகியுள்ளது. இந்த மனமாற்றமே எனக்கு திருப்தியைத் தருகிறது.