இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 18ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையை மார்ச் 28ஆம் தேதி உத்ரகாண்ட் மாநிலம் ருத்ரப்பூர் நகரில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக அம்மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் தேவேந்திர பாஷின் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 'ருத்ரப்பூரில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவிருந்த பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேச திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்தப் பேரணி கைவிடப்பட்டது. இந்நிலையில் மார்ச் 24, 26 ஆகிய தேதிகளில் பாஜக சார்பில் 500 பேருடன், உத்ரகாண்டின் ஐந்து தொகுதிகளில் இப்பேரணி நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணி நிகழ்ச்சிகளில் உத்ரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மத்திய அமைச்சர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்' எனக் கூறினார்.