பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாம் முறை ஆட்சியைக் கைப்பற்றி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது.
இதையொட்டி பல்வேறு, தலைவர்களும், பாஜகவினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசிய தலைவருமான அமித் ஷா இரண்டாம் ஆண்டு ஆட்சியைத் தொடங்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
அவரது பதிவில், "வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் (2.0) ஓராண்டு இன்றுடன் நிறைவடைகிறது. இத்தருணத்தில் அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தொலைநோக்குப் பார்வையுடைய அவரது தீர்க்கமான ஆட்சியில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என நம்புகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைத்த இந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்றுப் பிழைகள் திருத்தப்பட்டது மட்டுமல்லாமல், ஒரு சுயசார்பு இந்தியாவிற்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளார்.
நேர்மையான தலைமைப்பண்பு, அயராத கடின உழைப்பின் பிரதிபலிப்பாக உள்ள நாடறிந்த தலைவர்கள் உலகில் அரிதாகவே உள்ளனர். நரேந்திர மோடியை இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இந்தத் தருணத்தில் நான் மரியாதை செலுத்த விரும்புகிறேன்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் நான் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் அங்கம் வகித்துவருவதில் பெருமைகொள்கிறேன். மேலும், தங்களது அயராத உழைப்பை வெளிப்படுத்திவரும் பாஜக தொண்டர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மோடி 2.0: ஓராண்டு நிறைவை ஒட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் கடிதம்