டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகப் பதவி வகித்துவந்த சைரஸ் மிஸ்திரி, 2016ஆம் ஆண்டில் நிர்வாகத் திறன் குறைபாட்டைக் காரணம் காட்டி அதிரடியாக நீக்கப்பட்டார். பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப்போராட்டம் தொடங்கியது. டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மிஸ்திரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ”கம்பெனிகள் சட்டப்படி என்னைப் பதவி நீக்கவில்லை என்பதால், பதவி நீக்கம் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என மிஸ்திரி கோரியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு டிசம்பர் உத்தரவிட்டிருந்தது. ஜனவரி மாதம் தீர்ப்பாயத்தின் உத்தரவு அமலுக்கு வரவிருந்த நிலையில், அதனை எதிர்த்து டாடா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை கடந்த மே 29ஆம் தேதியன்று விசாரிக்கத் தொடங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சைரஸ் மிஸ்திரி தனது வாக்குமூலத்தை நேற்று சமர்பித்தார்.
அதில், "2016ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று டாடா சன்ஸ் தலைவராக இருந்த என்னை எந்தவிதமான காரணமும் தெரிவிக்காத ஒரு போர்டு ரூம் சதித்திட்டத்தில் நீக்கினர். ஆனால், இதற்குப் பின்னர் பத்திரிகை அறிக்கைகளில், நான் செயல்திறன் இல்லாததால் முதன்மையாக நீக்கப்பட்டதாக குழு கூறியது. டாடா சன்ஸ் எனது கண்காணிப்பின் கீழ் நஷ்டமடைந்ததாகக் கூறியது. ஆனால், இது ஆண்டுக்கு சராசரியாக 85 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது.
எனது செயல்திறனை இழிவுபடுத்தும் நோக்கில் இயக்க லாபத்தை அடைவதற்கு டிசிஎஸ்ஸிலிருந்து ஈவுத்தொகையை விலக்க டாடா முயன்றது. எனது தலைமையிலான டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்க இழப்பு 2016ஆம் ஆண்டில் சுமார் 550 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இப்போது, ரத்தன் டாடா தலைமையில் 2019 ஆம் ஆண்டில் இயக்க இழப்புகளில் 282 சதவீதம் அதிகரித்து 2,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ரத்தன் டாடாவின் மோசமான செயல்திறன் காரணமாக எழுந்த பிரச்னை.
என்னை நீக்கியதில் என் செயல்திறனுக்கு தொடர்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்ட மற்றொரு உதாரணத்தைச் சொல்ல விழைகிறேன். நான் தலைவராக இருந்தபோது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் டாடா குழுமத்தில் சென்செக்ஸ் 5 விழுக்காடாக விஞ்சி நின்றது.