இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரோடு மாவட்ட ஆவின் ஒன்றியத்திலிருந்து காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கலப்புத் தீவனங்கள், பூஞ்சை பிடித்துப் போயிருப்பதும், அதை அப்படியே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கியிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
ஏனெனில் 'அப்லாடாக்சின் எம்-1' என்ற நச்சுத்தன்மை கலந்த பால் தமிழ்நாட்டில்தான் அதிகளவில் விற்பனையாகிறது என்றும், அப்லாடாக்சின் எம்-1 நச்சுத்தன்மை கலந்த பாலை குடிப்பதால் புற்றுநோய் வரும் என்கிற அதிர்ச்சித் தகவலை மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் 'அப்லாடாக்சின் எம்-1' என்கிற நச்சுத்தன்மையானது, பூஞ்சை பிடித்த தீவனங்களை உண்ணும் கால்நடைகளிலிருந்து கறக்கப்படும் பாலில்தான் உருவாகிறது.