ஜம்மு:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி வீட்டுச் சிறை வைக்கப்பட்டார்.
அவரின் 14 மாத வீட்டுச் சிறை செவ்வாய்க்கிழமை (அக்.13) இரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக மெகபூபா முஃப்தியின் வீட்டுச் சிறை சட்டவிரோதமானது என்று அவரின் மகள் இல்திஜா முஃப்தி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பரில் மெகபூபா ஏன் இவ்வளவு காலம் வீட்டுச் சிறையில் உள்ளார் என ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தநிலையில் அவரது வீட்டுச் சிறைவாசம் இன்று இரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மெகபூபா, “எனது சட்டவிரோத வீட்டுச் சிறை நிறைவாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தக் கடின நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மெகபூபா முஃப்தியின் வீட்டுச் சிறை பலமுறை நீட்டிக்கப்பட்டது. வீட்டுச் சிறை விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில், மெகபூபா முஃப்திக்கு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிணை கிடைத்தும் அல்லல்; சிறை பறவையான ஸ்வப்னா சுரேஷ்!