தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 13, 2019, 5:10 PM IST

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் மோடி-அபே சந்திப்பு நடக்குமா? நீண்ட மவுனம் காக்கும் இந்திய வெளியுறவுத் துறை!

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தியில் நடக்கவிருக்கும் நிலையில், அங்கு குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இதனால் மோடி-அபே சந்திப்பு திட்டமிட்டப்படி நடக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.

MEA Silent On Assam As Venue For India-Japan Talks Amid CAB Protests
MEA Silent On Assam As Venue For India-Japan Talks Amid CAB Protests

பிரதமர் நரேந்திர மோடி- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இருநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டை அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் கவுஹாத்தியில் நடத்த இந்திய வெளியுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாடு வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து 17ஆம் தேதி மணிப்பூரில் உள்ள இம்பால் போர் நினைவிடத்தை ஷின்சோ அபே பார்வையிடுகிறார். மேலும் இருவரும் உலகப்புகழ் பெற்ற காசிரங்கா பூங்காவையும் பார்வையிட உள்ளனர்.

ஆனால் அஸ்ஸாமில் தற்போது நிலைமை சாதகமாக இல்லை. அங்கு, குடியுரிமை திருத்த சட்டம், இந்திய குடிமக்கள் தேசிய பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடந்துவருகிறது.

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாமில் போராட்டம்

இதனால் திட்டமிட்டப்படி மோடி-அபே சந்தித்துக் கொள்ளும் மாநாடு கவுஹாத்தியில் நடக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், கடந்த வார செய்தியாளர் சந்திப்பில் மாநாட்டின் தேதிகளை உறுதிசெய்தார்.

எனினும் கவுஹாத்தியில் மாநாடு நடக்குமா என்பது பற்றி அவர் உறுதியாகக் குறிப்பிடவில்லை. அஸ்ஸாமில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சந்திப்பு வடகிழக்கு மாநிலங்களில் நடக்க வேறு சில முக்கியக் காரணங்களும் உள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் ஜப்பான் முதலீட்டை கொண்டுவரவும், இந்த மாநாடு முக்கிய மையப்புள்ளியாகக் கருதப்படுகிறது. இவ்வாறான சூழலில் மூத்த செய்தியாளர், எழுத்தாளர் ஸ்மிதா சர்மா முன்னாள் தூதர் ராகேஷ் சூட்டிடம் பேட்டி கண்டார். அப்போது அக்ஷா ஒப்பந்தம் (அமெரிக்கா, ஜப்பான், இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சி), சீன விவகாரம் குறித்து பேசப்பட்டது. ஸ்மிதா சர்மா எழுப்பிய கேள்வியும் ராகேஷ் சர்மா அளித்த பதிலும் இதோ...

கேள்வி: மோடி- அபே பேச்சுவார்த்தைக்கான இடமாக கவுஹாத்தியைத் தேர்ந்தெடுத்தது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

பதில்: மோடி கடைப்பிடிக்கும் ராஜதந்திர கொள்கை பாணியின் ஒரு பகுதி இது. முதல்முறையாக சீனப் பிரதமர் இந்தியாவுக்கு வந்தபோது, குஜராத்தில் அதுவும் சபர்மதியைப் பார்வையிட்டதிலிருந்து தொடங்கியது. இரண்டாவது முறை, தமிழ்நாட்டில் சந்திப்பு நடந்தது. அபேவை கடந்த முறை வாரணாசியில் வரவேற்று சந்தித்தார் பிரதமர் மோடி. தலைநகர் டெல்லி ஒரு இறுக்கமான சூழலுடன் இருப்பதால், அதைவிட்டு வெளியில் இப்படியான சந்திப்புகளை வைத்துக்கொள்ள அவர் விரும்புகிறார். வடகிழக்கு மாநிலங்களில் ஜப்பானின் முதலீட்டு ஈடுபாடும் எதிரொலிக்க, மோடியின் தனித்துவமான ராஜதந்திர பாணியின் அடிப்படையிலேயே அது நடந்தேறியுள்ளது.

கேள்வி: இந்தியாவின் ’கிழக்கு நோக்கிய செயல்பாடு’ கொள்கைக்கும் ஜப்பானின் இந்திய-பசிபிக் போர் தந்திரத்துக்கும் இடையிலான ஒருங்கிணைவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நாம், முதலில் வெளியுறவு, பாதுகாப்புத் துறைகளின் அமைச்சர்களுக்கிடையிலான இரட்டை இருதரப்பு (2+2) பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறோம். முன்பெல்லாம் ஜப்பானிய தரப்பில் இத்துறைகளின் செயலர்கள், துணை அமைச்சர்கள் மட்டத்தில்தான் பங்கேற்பு இருந்துவந்தது. இது இப்போது கேபினட் மட்டத்துக்கு உயர்ந்துள்ளது. கூட்டுப் படைப்பயிற்சியில் முன்னதாகக் கடற்படை அளவில் மட்டுமே பெரிய கவனம் இருந்தது.

ராணுவ கூட்டுப் பயிற்சி
இப்போது தரைப்படை, விமானப் படைகளுக்குமாக அதை விரிவாக்கியிருக்கிறோம். முன்னர் இப்படியான கூட்டுப்பயிற்சி செயல்பாடுகளைத் தடுக்கும்படியான உள்நாட்டுச் சட்டங்களை ஜப்பான் கொண்டிருந்தது. பிற்பாடு அதில் தளர்வு ஏற்பட்டு, இப்போது கூட்டுப்பயிற்சியை சாத்தியமாக்கும் அளவுக்கு வந்துள்ளது. ராணுவப் பயன்பாடுகளாக மாறக்கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் சாத்தியம் உள்ளது. நீரிலும் நிலத்திலுமிருந்து பறக்கக்கூடிய வகை யு.எஸ்.2 விமானத்தைக் கொள்முதல் செய்வதற்காக நாம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அது முற்றிலும் சாத்தியமாகக்கூடியதே. அந்தப் பேச்சு வெற்றிபெற்றுவிட்டால், ஜப்பானிடமிருந்து நாம் வாங்கப்போகும் முதல் பாதுகாப்பு சாதனமாக அது இருக்கும். அந்தத் திசையில் படிப்படியான நகர்வு காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய செயல்பாடு கொள்கைக்கும் சுதந்திரமான வெளிப்படையான இந்திய-பசிபிக் வட்டாரம் என்னும் ஜப்பானிய நோக்குக்கும் இடையில் ஒருங்கிணைவை இங்குப் பார்க்க வேண்டும்.

கேள்வி:அக்சா உடன்பாட்டின்படி ஜப்பானின் படைத்தளத்தில் இந்திய கடற்படையும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை ஜப்பானிய பாதுகாப்புப் படையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் எப்படியாக இருக்கும்?

பதில்: ஜப்பானிய கப்பல்களோ படகுகளோ கடற்படை விமானங்களோ இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் வந்தால், ஒவ்வொரு முறையும் போக்குவரவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்குப் பதிலாக பொருத்தமான ஒரு சட்டத்தை உருவாக்குவதே சிறந்தது ஆகும். ஆகையால், ஜப்பானிய கடற்கலங்கள், போர் விமானங்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வரவும் நமது போர் விமானங்கள் ஜப்பானிய கடல் பகுதிக்கும் அதன் கிழக்குத் துறைமுகத்துக்கும் போவதற்கான ஒரு நிரந்தரமான ஏற்பாடு இது. முன்னதாக அமெரிக்கா, ஃபிரான்ஸ் ஆகியவற்றுடன் நாம் செய்துகொண்டதைப் போன்றதே ஆகும்.

கேள்வி:ஜப்பானிடமிருந்து நீர்நிலப் புறப்பாட்டு விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அணுக்கொள்கை மீதான அந்நாட்டின் உலகப்போர் அனுபவத்தை முன்னிட்டு இதில் உள்நாட்டளவில் எவ்வளவு மாற்றம் தேவையாக இருக்கும்?

பதில்: இது ஜப்பானின் நீண்டகால உள்நாட்டுப் பிரச்னையாக இருந்துவருகிறது. ’அமைதிவழி’யானது அங்கு மிகவும் வலுவாக உள்ளது. ஆனால், 1945 முதல் அவர்களுக்கு வழிகாட்டியைப்போல இருந்துவரும் ஒரு நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உண்மையிலேயே பிரதமர் அபே உணர்ந்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஜப்பான் நாடானது அமெரிக்கர்களால் தோற்கடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. அதையொட்டி அந்தச் சமயத்தில் ’அமைதிவழி’ கருத்தாக்கம் ஜப்பானின் மீது திணிக்கப்பட்டது. தொடர்ந்து, அமெரிக்காவின் பாதுகாப்புக் குடையின் கீழ் வாழ்வது வசதியென ஜப்பான் உணர்ந்தது. ஆகையால், சற்று வேறுபடுத்திக்காட்டும் வகையில் ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தன்மையை அமைத்திட பிரதமர் அபே எல்லாவற்றையும் கவனமாக ஆராய்ந்து பார்க்கிறார்.

கேள்வி:இப்போது இந்தியாவும் ஜப்பானும் ஒன்றுக்கொன்று சீனாவுக்கான மாற்றீடாகப் பார்க்கின்றனவா?

பதில்: இது மிகவும் சிக்கலான விஷயமாகும். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் சீனாவானது பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடு. சீனாவில் உள்ள ஜப்பானின் அந்நிய நேரடி முதலீடு மற்ற எந்த நாட்டையும்விட அதிகமானதாகும். 1980-களில் சீனாவில் முதலீடு செய்த முதல் நாடு ஜப்பான்தான். அதைத் தொடர்ந்தே தென்கொரியர்கள், அமெரிக்கர்கள் அங்கு நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஆகையால் ஜப்பானோ இந்தியாவோ சீனாவுடன் குறிப்பிட்ட பொருளாதார ஒருங்கிணைப்புடன் இருக்கும் யதார்த்தத்தை புறந்தள்ளிவிட முடியாது. இதேசமயம், சீனாவுடன் ஜப்பானுக்கு உள்ள கடல் எல்லை விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமலும் உள்ளது. இந்தியாவும் சீனாவுடன் நில எல்லைத் தகராறை தீர்க்காமல் உள்ளது. இத்துடன் பாகிஸ்தானுடன் அந்நாடு பாதுகாப்பு ஏவுகணை மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பைக் கொண்டிருக்கிறது.

இப்படி (ஜப்பான், இந்தியா) இரு நாடுகளுடனும் பாதுகாப்புப் பிரச்னைகளில் சீனா இடையூறு செய்கிறது. இந்நிலையில், நாம் இருதரப்புமாக கூடுமானவரை எப்படி சிறப்பாக இணைந்துசெயல்பட முடியும், எப்படியான அரசியல் ஒருங்கிணைவு பலனளிக்கும் என்பதை நோக்க வேண்டும். ஆனால், இது ஒருவகை ராணுவக் கூட்டாக இருக்காது; ஏனெனில், இன்னும் அமெரிக்காவுடனான கூட்டில்தான் ஜப்பான் நீடிக்கிறது. பிரதமர் மோடியும் அபேவும் காசிரங்கா தேசியப் பூங்காவைப் பார்வையிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும், மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவும் ராணுவ நகர்த்தலுமான இப்போதைய சூழலில், மத்திய அரசு தன் திட்டங்களை அவசரமாக மறுபரிசீலனை செய்யவும் கூடும்.

இவ்வாறு ஸ்மிதா சர்மாவின் கேள்விக்கு சூட் பதிலளித்தார்.

ஜப்பான்-இந்திய பிரதமர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம் அல்லது நாள் மாற்றப்படுமா? என்று ஊடகங்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பினாலும் வெளியுறவுத் துறை இது தொடர்பான எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த பெயர் வெளியிட விரும்பாத ஜப்பானிய அலுவலர் ஒருவர், “டெல்லியில் உள்ள ஜப்பானியத் தூதரகம் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. இந்தியத் தரப்பின் ஏற்பாடுகளால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்கிறார்.

மேலும், “மோடியும் அபேவும் கடைசியாக கடந்த நவம்பரில் பாங்காக்கில் நடந்த ஆசியான் உச்சிமாநாட்டின்போது பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். கடந்த வாரம் இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அமைச்சர்களின் சந்திப்பு நடந்தது. அதில் பரஸ்பர வசதிகள், தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் (Acquisition and Cross-Servicing Agreement (ACSA)) குறித்து விவாதிக்கப்பட்டது. அக்ஷா ஒப்பந்தத்தின்படி இந்திய ராணுவமும் ஜப்பானிய பாதுகாப்புப் படையும் தங்களின் படைத்தளங்களையும் தளவாட வசதிகளையும் பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ள வகைசெய்கிறது. இது, அமெரிக்கா அல்லது ஃபிரான்சுடன் இந்தியா அமைத்துள்ள புரிந்துணர்வு உடன்பாட்டைப் போன்றது.

ABOUT THE AUTHOR

...view details