நாட்டிலுள்ள ஏராளமான நீரிழிவு நோயாளிகள் உள்பட பலருக்கும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 70 மில்லியன் (7 கோடி) மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நாட்டில் ஐந்து பேர் கொண்ட குடும்பங்களை நாம் எடுத்துக்கொண்டால், 350 மில்லியன் (35 கோடி) மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோயாளிகளை பாதிக்கும் மற்ற காரணிகளான மன அழுத்தம், பதற்றம் போன்றவை நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
புதிய கரோனா வைரஸ் (கோவிட்-19) இந்த புதிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைப்போல, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதே அளவு ஆபத்தில் உள்ளனர். இருப்பினும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால், நீரிழிவு நோய் இல்லாத மற்றவர்களை விட மோசமான பாதிப்பையும் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.
புதிய கரோனா பெருந்தொற்று பரவிய மற்ற நாடுகளிலும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து என்றால், அதிலும் 60 வயதை கடந்த நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பு மிகக் கடுமையானதாக உள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்பட்டால், அவரது உடலில் ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும்.
வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உடல் அதிக அளவில் வேலை செய்வதால், ரத்த சர்க்கரை அளவு குறைவதும், அதிகரிப்பதுமாக மாறிக்கொண்டே இருக்கும்.
நீரிழிவு நோய் உடலின் கண், கால், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. எனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் கூறும் அறிவுரையை மற்றவர்களைவிட அதிக கவனத்துடன் பின்பற்ற வேண்டும்.
முழு அடைப்பு காரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும்போல் தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
உள்ளூர் கடைக்காரர்களிடம் கிடைப்பதை மட்டுமே வாங்க முடிவதால் உணவில் கவனம் செலுத்துவதும் கடினமானதாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அன்றாட மருந்துகளை சார்ந்திருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தி வந்த மருந்துகள், குறிப்பிட்ட பிராண்டு மருந்துகள் அருகாமையிலுள்ள மருந்தகங்களில் இல்லாத நிலையும் உள்ளது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?
- உங்களைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வருபவர்களிடம் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியில் நின்று பேசுங்கள். மருந்துகள் அல்லது மளிகைப் பொருள்கள் வாங்க வேண்டுமென்றாலும், குடும்பத்தில் உள்ளவர்கள், பக்கத்து வீட்டுக்காரர் அல்லது பாதுகாப்புக் காவலரை அனுப்புவது நல்லது.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது வீட்டில் உள்ள அனைவருமே தங்கள் கைகளை சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- இதற்கு முன்பு பயன்படுத்திய மருந்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள். சூழ்நிலை காரணமாக மருந்தை மாற்றவோ அல்லது அளவை குறைக்கவோ வேண்டாம். ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள், ஆஸ்பிரின் போன்ற வேறு எந்த மருந்தை பயன்படுத்தி வந்தாலும் தொடர்ந்து அதையே எடுத்துக்கொள்ளுங்கள்.
- மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு தேவையான மருந்துகளை இப்போதே வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டால், உங்களுக்கு தேவையான மருந்தை தேடி வெளியே செல்ல வேண்டி இருக்காது.
- உங்களுக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளதா என்பதை கவனித்து அடுத்த வாரத்திற்கு தேவையான மருந்துகளை ஏற்பாடு செய்யுங்கள்.
- முழு அடைப்பின்போது இன்சுலின் அல்லது மெட்ஃபோர்மின் போன்ற குறிப்பிட்ட மருந்துகளின் பிராண்டுகள் கிடைக்காமல் போகலாம். அப்போது உங்களுடைய மருத்துவரிடம் மாற்று வழியை கேளுங்கள். வேறு பிராண்ட்டு மருந்துகள் பயன்படுத்த வேண்டியிருந்தாலும், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- உங்களுடைய உணவு முன்பு போலவே இருக்க வேண்டும். மூன்று முறை உணவு உண்பதற்கு பதிலாக சிறிது நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது. வானிலை வெப்பமாகவும், வறட்சியாகவும் மாறி வருவதால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வழக்கமாக வீட்டிலேயே நீங்கள் சர்க்கரை அளவை சோதனை செய்பவராக இருந்தால், அதையும் தொடர்ந்து செய்யுங்கள். உடற்பயிற்சி உள்ளிட்ட வழக்கமான விஷயங்களை செய்யாமல் இருப்பதால் அடிக்கடி சோதனை செய்துக்கொள்ளுங்கள்.
- சர்க்கரை அளவு அதிகரிப்பின் அறிகுறிகளை பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள். இதில் இயல்பை விட அதிக சிறுநீர் கழிப்பது (குறிப்பாக இரவில்), அதிக தாகம், தலைவலி, சோர்வு மற்றும் சோம்பல் ஆகியவை அடங்கும்.
- நீங்கள் வெளியில் செல்வது பாதுகாப்பானது என்று கூறும்வரை நீங்கள் வழக்கமான பரிசோதனைக்கோ, ஏற்கனவே நிலுவையில் உள்ள தகவல்களை பெறவோ செல்லக்கூடாது.
- வீட்டிற்குள்ளேயே இருப்பதால் உங்கள் வழக்கமான உடற்பயிற்சியை செய்யக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீட்டிற்குள்ளேயே ஒரு நாளைக்கு 400 முதல் 500 அடிகள் வரை ஒருநாளைக்கு 4 முறை நடந்தால் 1.5 கி.மீ முதல் 2 கி.மீ தூரம் நடந்ததற்கு சமமாக இருக்கும். உடலை வளைக்கும் உடற்பயிற்சிகள் செய்யுங்கள். ஒரே இடத்திலேயே அமர்ந்திருக்காதீர்கள். 45 முதல் 60 நிமிடங்களுக்கு பிறகு எழுந்து நடங்கள். தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும்போது ரத்த ஓட்டம் தடைப்பட்டு மரத்துப் போகாமல் இருக்க கை, கால்களை சுழற்றுங்கள்.
- குழந்தைகள், பேரக்குழந்தைகள் என வீட்டில் அனைவருடனும் சேர்ந்து வீட்டின் அனைத்து நடவடிக்கையிலும் கலந்துகொள்ளுங்கள். அவர்களுடன் சேர்ந்து பாம்புக் கட்டம், கேரம், லூடோ போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.
- வீட்டில் யாருக்கேனும் கோவிட்-19 தொற்று நிரூபிக்கப்பட்டிருந்தால், உங்களிடம் இருந்தும் வீட்டில் மற்றவர்களிடம் இருந்தும் அவர்களை தனிமைப்படுத்துங்கள்.
மற்றவர்களைபோலவே நீரிழிவுநோயாளிகளுக்கும் கரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே, கோவிட்-19 தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றி புத்திசாலித்தனமாக இருப்பது அவசியம்.
கட்டுரையாளர் ஹைதராபாத் பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஜி.வி.எஸ் மூர்த்தி
இதையும் படிங்க: உலகத்தின் அவசரத் தேவை செவிலியர்கள்!