மேற்கு வங்க மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா தலைமையில் ஆளும் திருணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே தொடர்ந்து பல்வேறு விதமான பிரச்னைகள் இருந்துவருகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இருகட்சியினரிடையே பலமுறை மோதல்கள் வெடித்தன.
எனினும் மக்களவைத் தேர்தலில் பாஜக முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்தில் 18 தொகுதிகளை கைப்பற்றி மம்தாவிற்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில், பராக்பூர் தொகுதியில் திருணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தினேஷ் திரிவேதியை பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங் வீழ்த்தினார்.
இதையடுத்து அர்ஜுன் சிங் ஆதரவாளர்கள் பார்கனாஸ் மாவட்டத்தின் நைகாதி பகுதியில் உள்ள திருணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து மே30 ஆம் தேதி பிரதமராக மோடி பதவியேற்ற தினத்தன்று நைகாதி பகுதியில் மம்தா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து அங்கு பாஜகவினர் ஆக்கிரமித்திருந்த தங்கள் கட்சி அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற மம்தா பானர்ஜி, அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த பாஜகவின் சின்னங்களை கறுப்பு மைகளைக் கொண்டு அழித்தார். பின் அதன் மேல் அனைத்து இந்திய திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை வரைந்தார்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் திருணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சிலர் பாஜகவில் இணைந்ததால் பல இடங்களில் இதுபோன்று கட்சி அலுவலகங்கள் மாற்றம் பெற்றுள்ளன.