டெல்லி:லிபியாவில், கடந்த மாதம் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களை மீட்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தாவா, "லிபியா அரசாங்கத்துடன் தொடர்ச்சியாகப் பேசி அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
கடத்தப்பட்டவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய முயற்சித்து வருகிறோம். லிபியாவில் உள்ள இந்தியத் தூதரகம், இந்த ஏழு பேரையும் மீட்பதற்கு லிபியா அரசாங்கம், பன்னாட்டு அமைப்புகள் ஆகியவற்றை அணுகியுள்ளது. கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்" என்றார்.
ஆந்திரா, பீகார், குஜராத், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த ஏழு பேரும் லிபியாவிலுள்ள அஸ்வேரிஃப் என்ற இடத்திலிருந்து செப்டம்பர் 14ஆம் தேதி கடத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தவர்கள்.