தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காந்தி 150: மகாத்மாவின் வாழ்க்கையே ஒரு சமூக சீர்திருத்தம்! - 150 years of gandhi

இந்தியாவில் உள்ள சனாதன சாதி அமைப்பு பல்வேறு அடுக்குகளைக் கொண்ட சமூக கட்டுமானத்தை கொண்டுள்ளது. இது பட்டியலினத்தவரை தலைமுறை தலைமுறைகளாகத் தீண்டத்தகாதவர்களாகத் தனிமைப்படுத்தியுள்ளது. காந்தியடிகளின் தலையான நோக்கமே நாட்டில் நிலவும் தீண்டாமையை ஒழிப்பதாகும்.

மகாத்மா காந்தி

By

Published : Aug 20, 2019, 12:12 PM IST

இளைஞர்கள் சிலர் தொடர்ந்து ஏற்படுத்திவரும் தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக தான் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக 1925ஆம் ஆண்டு மகாத்மா காந்திஅறிவித்தார். 'எனது மரணத்திற்கு நீங்கள் காரணம் ஆகிவிடாதீர்கள்!' என்று அவர் இளைஞர்களைப் பார்த்துச் சொன்னபோது நாடே அதிர்ந்தது. உடனடியாக அது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து காந்தியிடம் மன்னிப்புக் கோரினர். அதுதான் மகாத்மாவின் சக்தி!

தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ், டர்பன் ஆகிய இடங்களிலும், இந்தியாவில் அகமதாபாத் அருகே சபர்மதி ஆசிரமம், மகாராஷ்டிராவில் வர்தா சேவகிராம் என மொத்தம் நான்கு ஆசிரமங்களைக் கட்டி எழுப்பினார். உண்மையைச் சொல்லப்போனால், காந்தி கட்டியெழுப்பியவை ஆசிரமங்கள் அல்ல; அவை அனைத்தும் சமூகத்தை ஆய்வு செய்யும் கூடங்கள்.

பலரும் காந்தியை ஒரு சுதந்திரப் போராட்ட நாயகனாக மட்டுமே பார்க்கின்றனர். அவர்களே காந்தியை 'தேசத்தந்தை' என்றும் அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில், காந்தி என்ற ஆளுமை அத்துடன் சுருங்கிப்போவதில்லை. அவர் சமூகத்திலுள்ள பிரச்னைகளை புரிந்துகொண்டு அதற்கான மாற்று வழிகளையும், கொள்கைகளையும் முன்மொழிந்தார். முன்மொழிந்ததுடன் மட்டும் நின்றுவிடாமல் அவற்றை நடைமுறைப்படுத்திய தீர்க்கதரிசி அவர்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் காந்தியடிகளைப் போல பலர் சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் பிரச்னைகள் குறித்தும் பேசியிருந்தாலும், அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் பின்பற்றியது என்று பார்த்தால் அவர்கள் கூறியதற்கு முரண்பட்டவையாகத்தான் இருக்கும்; அதில் மகாத்மா காந்தி மட்டும் விதிவிலக்கு! அவர் தான் கூறிய கருத்துகளை முதலில் தனது சொந்த வாழ்க்கையில் செயல்படுத்திக்காட்டினார்.

காந்தி எப்போதும் ஒன்று கூறுவார், "நமது இலக்குகளைப் போல, அதனை அடைய நாம் பயணிக்கும் பாதையும் உன்னதமாக இருக்க வேண்டும்" என்பார். அதைத்தான், அவரது ஆசிரமங்களிலும் அவர் பின்பற்றவைத்தார். சமூகத்தில் உள்ள பிரச்னைகளை களைந்து, சாதாரண மனிதர்களையும் புனிதர்களாக மாற்ற முயலும் ஆய்வுக் கூடங்களாக அவரது ஆசிரமங்கள் திகழ்ந்தன.

ஆதி காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் முக்தியடையவும் ஞானத்தைப் பெறவும் முக்கியக் காரணமாக அவர்கள் பின்பற்றிய ஆசிரம வாழ்க்கை முறை இருந்தது. ஆனால் காந்தியடிகளைப் பொறுத்தவரை ஆசிரமங்கள் என்பது அகிம்சை மூலம் போராடுவதற்கும் - ஏற்றத்தாழ்வுகளற்ற புதிய சமூகத்தையும் அதில் வாழ புது மனிதர்களையும் உருவாக்குவதற்குமான ஒரு இடமாகவே பார்த்தார். காந்தியின் ஆசிரமத்தில் அனைவருமே சமம். சாதி, மதம், பாலினம், நாடு, மொழி உள்பட எதன் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகள் அங்கு இருக்காது. சமையல் வேலை முதல் கழிப்பறை சுத்தம் செய்வது வரை அங்குள்ள அனைவரும் அனைத்து வகையான வேலைகளையும் செய்தனர். காந்தி தனது ஆசிரமத்திலுள்ளவர்கள் பின்பற்ற 11 கொள்கைகளை வரையறுத்தார். அவையாவன:

  1. சத்யா - உண்மை
  2. அஹிம்சா - அகிம்சை
  3. பிரம்மச்சரியா - இல்லறம் துறந்தநிலை
  4. அஸ்தேயா - களவாடாமலிருத்தல்
  5. அசங்ரஹா - உடமைகள் மீது நாட்டம் இல்லாமை
  6. ஷாரீர-ஷ்ரமா - பரம்பரைத் தொழில்
  7. அஸ்வதா - உணவுக் கட்டுப்பாடு
  8. அபயா - அச்சம் தவிர்
  9. சர்வ தர்ம சமனத்துவா - அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தல்
  10. ஸ்வதேசி - நாட்டுக்கான நமது சேவை
  11. அஸ்பிரிஷ்யநிவாரணா - தீண்டாமையை ஒழித்தல்

போராட்டங்கள், வேலை நிறுத்தம், ஒத்துழையாமை இயக்கம் மேற்கொண்டாலே நம் நாட்டிற்கு விடுதலை கிடைக்கும். பிறகு ஏன் இதுபோன்ற ஆசிரம வாழ்க்கை முறையையும் கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று ஒருவர் கேட்கலாம். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பது மட்டும் போதாது, நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே காந்தியடிகளின் நோக்கமாக இருந்தது. இயற்கையுடன் இயைந்து வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றே அவர் எண்ணினார்.

சாதிய உணர்வு, மத வெறுப்பு, சுயநலம், வன்முறை, பாலின பாகுபாடு போன்ற சமூகத்துக்குத் தீமைகள் விளைவிக்கும் அனைத்தும் தற்போதுவரை நம் சமூகத்தில் தொடர்கின்றன. அதனால்தான் காந்தியடிகள் மனிதர்களைப் புனிதர்களாக மாற்ற முயன்றார். அதன் வெளிப்பாடே காந்தியின் ஆசிரமங்கள். ஒத்துழையாமை இயக்கம், அகிம்சை வழிகள் மூலமாக மனிதர்களை மேம்படுத்த முயன்றார். அதற்கான வழியாகவே சத்தியாகிரகத்தைப் பார்த்தார். மிக முக்கியமாக, விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்த அனைவரும் இதுபோல முற்போக்கான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.

மகாத்மா காந்தி

இந்தியாவில் உள்ள சனாதன சாதி அமைப்பு பல்வேறு அடுக்குகளைக் கொண்ட சமூக கட்டுமானத்தை உருவாகியுள்ளது. இது பட்டியலினத்தவரை தலைமுறை தலைமுறைகளாகத் தீண்டத்தகாதவர்களாகத் தனிமைப்படுத்தியுள்ளது. காந்தியடிகளின் தலையாய நோக்கமே நாட்டில் நிலவும் தீண்டாமையை ஒழிப்பதாகும். ஒருமுறை காந்தியடிகளின் ஆசிரமத்தில் அப்போது ஹரிஜன்கள் என்றழைக்கப்பட்ட பட்டியலின தம்பதி நுழைந்தபோது, காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் உள்பட அனைவரிடமும் எதிர்ப்புகள் எழுந்தன. முடித்திருத்துபவர்களும் பட்டியலின முடித்திருத்த மறுத்துவிட்டனர்.

இதுபோன்ற அதிருப்தி எழுந்தபோதும், காந்தி அவரது முயற்சிகளிலிருந்து துளியும் பின்வாங்கவில்லை. தானே அவர்களுக்கு முடித்திருத்தினார். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்தார். இது புது சமுதாயத்தைக் கட்டமைக்க அவர் எடுத்த முதல் புரட்சிகர நடவடிக்கை.

சமூகத்தில் வாழும் இரு பிரிவினருக்கிடையே பகை உணர்வை வளர்க்கும் வேலையை ஆளும் வர்க்கம் எப்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கும். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களும் அதையே செய்தனர். இதை முறியடிக்கக் காந்தியடிகள் அனைத்து மதங்களிடையே ஒற்றுமை உணர்வைப் பரப்பினார். அவரது ஆசிரமத்தில் தினமும், அனைத்து மத பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து காந்தியின் சொற்பொழிவு நடைபெறும். தென் ஆப்பிரிக்காவிலுள்ள டால்ஸ்ட்ராய் ஆசிரமமாக இருந்தாலும் சரி, சபர்மதி ஆசிரமம் ஆனாலும் சரி, காந்தியின் ஆசிரமத்தில் அனைவரும் அனைத்து விதமான வேலைகளையும் செய்ய வேண்டும்.

ஆசிரமத்துக்குத் தேவையான காய்கறிகளையும் பழங்களையும் அங்கிருப்பவர்கள்தான் விளைவித்தனர். காலணிகளை உற்பத்தி செய்தல், தச்சு வேலைகள், வெல்லம் தயாரித்தல் போன்ற குடிசைத் தொழில்களையும் அனைவரும் செய்தனர். அனைவரும் சமம் என்ற கொள்கையை விளக்கும் வகையில் அறிவுஜீவிகள் முதல் சராசரி நபர்கள் வரை அனைவரும் அனைத்து விதமான வேலைகளையும் செய்தனர்.

மகாத்மா காந்தி

அவர்களுக்கான ஊதியமும் எவ்வித பாகுபாடின்றி சமமாகவே வழங்கப்பட்டது. நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் நிதி சுதந்திரம் பெற வேண்டும் என்றே காந்தி விரும்பினார். இதற்காக அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஓர் எளிமையான கை ராட்டையை உருவாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசையும் அறிவித்தார்.

சிறந்ததைச் செயல்படுத்தல்

தென்னாப்பிரிக்காவிலுள்ள காந்தி ஆசிரமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு லண்டனில் கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது. காந்தியின் மூத்த மகன் ஹரிலாலுக்கு லண்டனில் படிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால் காந்தி ஆசிரமத்திலிருந்த மற்றொரு இளைஞருக்கு லண்டனில் படிக்கும் வாய்ப்பளித்தார். இதனாலேயே ஹரிலால் தனது தந்தை காந்தியை வாழ்நாள் முழுவதும் வெறுத்தார். வாரிசு என்பதற்காகவே ஒருவருக்கு எந்த ஒரு அனுகூலமும் பெறக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இதை அவர் பிறருக்கு போதித்தது மட்டுமல்லாமல் அவரது வாழ்க்கையிலும் பின்பற்றினார்.

தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் நடைபெற்ற சத்தியாகிரகங்களில் காந்தி ஆசிரமங்கள் பங்கு அளப்பரியது. ஆசிரமங்களில் உள்ள அனைவரும் அனைத்து மத பண்டிகைகளையும் கொண்டாடினர். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பல இஸ்லாமியர்கள் சத்தியாகிரக இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். கான் அப்துல் கபார்கான் என்ற இஸ்லாமியர் மிக முக்கிய காந்தியவாதியாகத் தனது இறுதிக்காலம்வரை செயல்பட்டார்.

குழந்தை திருமணங்களை காந்தி கடுமையாக எதிர்த்தார். சுதந்திரப் போராட்டங்களில் லட்சக்கணக்கான பெண்களைப் பங்கேற்கவைத்தார். ஒவ்வொரு தனி மனதர்களின் ஆளுமைகளையும் தாய்மொழியையும் வளர்க்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை காந்தி அமல்படுத்தினார். மேலும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் படிக்கும் வகையில் ஆசிரமங்களில் இருபால் கல்வியையும் ஊக்குவித்தார்.

மகாத்மா காந்தி

காந்தி பிரம்மச்சரியத்தையும் நவீனத்துவத்துக் கொள்கைகளையும் பரப்பியதால் சிலர் அவரை ஒரு அடிப்படைவாதியாகச் சித்திரிக்க முயன்றனர். அதில் துளியும் உண்மை இல்லை. ஆசிரமத்திலுள்ள மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க சில ஆசிரியர்களை குடும்பத்துடன் ஆசிரமத்திற்கு வரவழைத்தார். அவர்கள் அனைவரும் காந்தி முன்மொழிந்த பிரம்மச்சரியத்தின் கொள்கையிலிருந்து விலக்குப்பெற்றனர்.

அதேபோல், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை கருணைக்கொலை செய்யவும் அவர் ஒப்புக் கொண்டார். அக்காலத்தில் இது ஒரு புரட்சிகர நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. மனிதர்களை இயந்திரங்களுக்கு அடிமையாக்குவதற்கு பதிலாக மனிதர்களே உடல் உழைப்பைச் செலுத்தச் சொன்னார். உலகில் முதலாளித்துவ சுரண்டலுக்கு மாற்றாகக் கூட்டுறவு நிதியம் முறையை முன்மொழிந்தார்.

காந்தியின் ஆசிரமம் பொதுமக்களின் சொத்து. யார் வேண்டுமானாலும் அங்குச் செல்லலாம், தங்கலாம். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியின் மகள் மேடலின் ஸ்லேட்டின் என்பவர் காந்தியின் ஆசிரமத்தில் சேர்ந்து காந்தியின் சீடர் மீரா பெஹானாகவே மாறி இறுதிவரை வாழ்ந்தார். ஆசிரமத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரு சமையலறை இருந்தது. ஆசிரமத்திலிருந்த அனைவருக்கும் ஒரே உணவு பரிமாறப்பட்டது. ஆசிரமத்தில் எந்தவொரு நபருக்கும் தனிப்பட்ட பொருள் என்று ஒன்று இல்லை. ஆசிரமத்திலிருந்த அனைத்தும் அனைவருக்கும் உரித்தானதாக இருந்தது. காந்தியடிகள் சாதிகளுக்கிடையே நடைபெறும் திருமணங்களை ஊக்குவித்தார். அத்தகைய திருமணங்களில் அவர் விரும்பி கலந்துகொண்டார்.

கொள்கைகள் இல்லாத அரசியல், தொழில் இல்லாத செல்வம், அறிவற்ற இன்பம், நேர்மையில்லா வணிகம், மனிதநேயம் இல்லாத அறிவியல் அறிவு, தியாகம் இல்லா வழிபாடு என பல பாவங்களை அவர் பட்டியலிட்டார். அவர் சுயநலத்தை முழுவதும் ஒதுக்கிவிட்ட ஒரு தியாக வாழ்க்கையையே வாழ்ந்தார்.

மகாத்மா காந்தி

இன்று நாம் சமுகத்தில் பெரும் சுயநலத்தையும் வன்முறைகளையும் மனிதர்களிடையேயான அதிகப்படியான போட்டிகளையும், செல்வத்தை அடைய மேற்கொள்ளும் இழிவான வழிகள், சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதும், பெண்கள் மீதம் கட்டவிழ்ந்துவிடப்பட்ட வன்முறைகள் என அனைத்து இழி செயல்களையும் காண்கிறோம்.

தற்போதைய நவீன சமூகத்திலும் காந்தி முன்மொழிந்த எளிமை, அகிம்சை, சுரண்டல் இல்லா சேவை, நாட்டுக்கான அர்ப்பணிப்பு, தியாக உணர்வு, மனிதநேயம் ஆகிய கொள்கைகள் மூலம் அவர் நம்முடனே இருக்கிறார். அவர் முன்னெடுத்த ஆசிரம வாழ்க்கையே அவர் நமக்குக் காட்டிய சிறந்த சீர்திருத்தப் பாதையாகும்.

ABOUT THE AUTHOR

...view details