மகாராஷ்டிரத்தில் இன்று மாலை பாஜக கட்சி சார்பில், அக்கட்சித் தலைவர் சந்தரகாண்ட் பட்டேல், ஆளுநர் பகத் சிங்கை நேரில் சந்தித்து பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆளுநர் மாளிகை ராஜ்பவன் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது,' மகாராஷ்டிரத்தில் சுழற்சி முறையில் ஆட்சியமைக்கக் கோரிய சிவசேனா தங்களின் நிலைப்பாட்டில் விடாப்படியாக இருக்கிறது. அதனால் பெரும்பான்மை இல்லாத பாஜகவால் தற்போது ஆட்சியமைக்க இயலவில்லை' என்றார்.
மேலும் பேசியவர், 'சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க நினைத்தால் அதற்கு நல்வாழ்த்துகள்' எனக் கூறினார்.
இந்நிலையில், 'கூடிய விரைவில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்போம்' என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆளுநர் பகத்சிங் கோசியாரி பாஜகவிற்கு அடுத்தபடியாக அதிக இடங்களை கைப்பற்றியிருக்கும் சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.