மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியிட்ட தேதியிலிருந்து இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக, சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பாஜகவுடன் கைகோர்த்தது தான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தது. தேர்தல் பரப்புரையில் கீரியும் பாம்புமாக இருந்து வந்த தேவேந்திர ஃபட்னாவிஸும் அஜித் பவாரும் திடீரென்று நண்பர்களாகச் சேர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஆனால், ஆட்சி செய்ய திட்டமிட்ட சிவசேனாவுக்கும் அதன் தொண்டர்களுக்கு இந்நிகழ்வு பெரும் எரிச்சலைத் தந்தது. இது ஒருபுறமிருக்க சரத் பவாரும், தேசியவாத காங்கிரஸின் தொண்டர்களும் அஜித் பவாரின் செயலால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகினர். சரத் பவார் தங்களுடன் உள்ளார் என்று உத்தவ் தாக்கரே கூற, அதனை ஆமோதிக்கும் விதமாக பவாரும் பாஜக ஆட்சிக்கு ஆதரவில்லை என்றார் உறுதியாக.
அன்றே காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் ஆலோசனை நடத்தினர். பின்னர், மூன்று கட்சிகளும் சேர்ந்து மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு, ஆட்சியமைக்க ஆளுநர் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம், முதலமைச்சர் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் ஆகிய இரு கடிதங்களை இன்று காலை சமர்ப்பிக்குமாறு துணைத் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.