231 இடங்கள் கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 121 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இங்கு, காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இரண்டு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ, 4 சுயேட்சைகள் என 121 எம்எல்ஏக்களின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
ஜோதிராதித்திய சிந்தியா போன்ற இளம் தலைவர்கள் இருப்பினும், மூத்த காங்கிரஸ் தலைவரான கமல் நாத் முதலமைச்சராக இருந்து வருகிறார். இருப்பினும் காங்கிரஸுக்கு அடுத்த இடத்தில் 109 எம்எல்ஏக்களை கொண்டுள்ள பாஜக, தனது சர்வ வல்லமைகளையும் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு குடைச்சல் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது.
அதன் உச்சமாக, மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இன்னும் மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாகவே, மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக பேசிய இரண்டு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களில் ஒருவரான ராமாபாய், “எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பாஜக ஆசை வார்த்தைகளைக் கூறி எங்களை இழுக்க முயற்சிக்கிறது. என்னை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு 60 கோடி ரூபாய் வரை கொடுப்பதாக பேரம் பேசுகிறார்கள். முட்டாள்கள்தான் அவர்களின் இந்த பேரங்களுக்கு மயங்குவார்கள்” என்று அப்பட்டமாக போட்டு உடைத்துள்ளார்.
பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மிகவும் பலமாக இருக்கும் கர்நாடகத்தில் இருந்துதான் தனது அரசியல் விளையாட்டை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வடக்கில் இருந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.