தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லையில் புதிதாக வெட்டுக்கிளி கூட்டம் வரவில்லை - மத்திய அமைச்சர் - tamil latest news

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து மே 28ஆம் தேதிவரை புதிதாக எந்த வெட்டுக்கிளி கூட்டமும் வரவில்லை என மத்திய வேளாண்மை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

மத்திய வேளாண்மை அமைச்சர்
மத்திய வேளாண்மை அமைச்சர்

By

Published : May 30, 2020, 9:42 AM IST

வட இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக மத்திய வேளாண்மை அமைச்சகம் நேற்று முன்தினம் (மே 28) கூறியிருந்தது.

மேலும் இன்னும் இரண்டு வாரங்களில் பிரிட்டனிலிருந்து 15 பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பான்கள் வாங்கப்படும். அதேசமயம் மருந்துகளை வான்வழி மூலம் தெளிப்பதற்கு டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் அனுப்பும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என மத்திய வேளாண்மை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளிலிருந்து நேற்று முன்தினம்வரை (மே 28) எந்த ஒரு வெட்டுக்கிளி கூட்டமும் புதிதாக வரவில்லை. மேலும் மாநில வேளாண்மைத் துறைகள், உள்ளூர் நிர்வாகம், எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை பல மாநிலங்களைத் தாக்கிய வெட்டுக்கிளி கூட்டம் முதிர்ச்சியடையாத இளம் வெட்டுக்கிளிகளாக உள்ளன என மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வேளாண்மை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேளாண் அமைச்சக அலுவலர்களுடன் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுவருகின்றன. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. நிலைமையை அவசரமாகக் கையாண்டுவருகிறது.

பாதிக்கப்பட்ட ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதோடு அவர்களுக்கு ஆலோசனையும் மத்திய அரசு வழங்குகிறது. இன்னும் 15 நாள்களில் மேலும் 15 பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பான்கள் பிரிட்டனிலிருந்து வர உள்ளன.

இதேபோல் 45 பூச்சிக்கொல்லி தெளிப்பான்கள் அதிகபட்சம் ஒன்றரை மாதத்திற்குள் வாங்கப்படும். ஏற்கனவே, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதற்காக ட்ரோன்களைப் பயன்படுத்த டெண்டர் மூலம் இரண்டு நிறுவனங்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் தேவை இருந்தால் நிதி உதவி ஒதுக்கப்படும்.

வெட்டுக்கிளி கூட்டத்தைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் முழு நடவடிக்கை எடுத்துவருகின்றன. தற்போது இளஞ்சிவப்பு இளம் வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவிற்குள் வெவ்வேறு இடங்களுக்கு வந்துள்ளன.

இவை சுறுசுறுப்பாக உள்ளதால் இதனை ஒரே இடத்தில் கட்டுப்படுத்துவது கடினம். அதனால் இதனைக் கட்டுப்படுத்த குறைந்தது நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை முழுமையாக தேவைப்படுகிறது. இதற்கான பூச்சிக்கொல்லி மருந்துகள் போதுமான அளவு கைவசம் இருப்பதாக வெட்டுக்கிளி கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: விசிட் அடித்த எறும்புத்தின்னி: கரோனா குழப்பத்தில் அலுவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details