உழைக்கும் தொழிலாளர்களின் தினமாக மே 1ஆம் தேதியை உலகெங்கிலும் தொழிலாளர் வர்க்கம், சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறது. இத்தினத்தில் தொழிலாளர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மம்தா பானர்ஜி, “உலக தொழிலாளர்கள் தினமான இன்று உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். இந்த கடினமான காலங்களில் 'நமது சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், முழு ஊரடங்கால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உதவ திரிணாமுல் காங்கிரஸ் அரசு அறிவித்த இரண்டு புதிய திட்டங்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
முழு ஊரடங்கின்போது தொழில் வர்க்கத்தின் பக்கம் நிற்க, மேற்கு வங்க அரசு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தது. அந்த திட்டங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 'ஸ்னேஹர் போரோஷ்' மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 'புரோசெஸ்டா' ஆகும். ஸ்னேஹர் போரோஷ்' திட்டத்தின் கீழ், முழு ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மேற்கு வங்க அரசு ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கிறது. அதேபோல் புரோசெஸ்டா திட்டத்தின் கீழ் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறது.
இதையும் படிங்க: 'நண்பர் உடலுடன் 4 நாள் பயணம், கரோனா பாதிப்புக்கு நிதியுதவி'- இளைஞருக்கு முதலமைச்சர் பாராட்டு!