கரோனா பரவல் காரணமாக நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில், இந்தத் தேர்வுகளை மேலும் தள்ளி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இச்சூழலில் நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும் என மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுகளை எழுதுவதற்கு, தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருவதாகவும் தேசிய திறனாய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஆக. 23) ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், “இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் ஏதோ சொல்கிறார்கள். மத்திய அரசு நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களின் மனதில் எழும் எண்ணங்கள் குறித்து கேட்டறிந்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வைக் காண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.