குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலம் செஹூரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா தாக்கூர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "ரோஹிங்கிய அகதிகள் அவர்கள் நாட்டில் படுகொலையில் ஈடுபட்டதால்தான், அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். இதனால் நம் நாட்டில் தஞ்சமடைந்த அவர்கள், மீண்டும் அதையே செய்யத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் நம் நாட்டின் கலாசாரத்தை சேதப்படுத்தி நாட்டை சிதைக்க முயலுகின்றனர். நம் நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் அவமதிக்கின்றனர்" என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. இந்தச் சட்டத்துக்கு எதிராக பணத்தை உபயோகித்து மக்களை போராட்டங்களில் ஈடுபடவைக்க சிலர் முயலுகின்றனர். இருப்பினும் குடியுரிமை திருத்த மசோதா இப்போது குடியுரிமை திருத்தச் சட்டமாக மாறிவிட்டது" என்று கூறினார்.