தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயிருக்கு ஆபத்தாக மாறும் காற்று மாசு

தரமான காற்று வீசும் 180 நாடுகள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இந்தியாவில், காற்று மாசு கட்டுப்பாட்டிற்காக தீர்ப்பாயம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக நவம்பர் 2020க்குள் நாடு முழுவதும் காற்றின் தரத்தை கண்காணிக்கும் 122 மையங்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Air
Air

By

Published : Sep 1, 2020, 9:11 PM IST

இடைவிடாத காற்று மாசுபாட்டால் ஆண்டு தோறும் இந்தியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இறப்பதாக, அதிகாரப்பூர்வ அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை உறுதிபடுத்தும் விதமாக, காற்று மாசுப் பரவல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறி வருகிறது என்று தேசிய சுத்தமான காற்றுத் திட்ட அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு மாசுப் பரவல் நிலையை மையமாக வைத்துப் பார்க்கும் போது, 2024ம் ஆண்டுவாக்கில் காற்று மாசு 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தேசியப் பசுமை தீர்ப்பாயம் முன்னர் கருத்து தெரிவித்திருந்தது. ஆனால், காற்று மாசு என்பது கட்டுப்படுத்தப்பட முடியாத நிலைக்கு சென்றிருப்பதால் நிர்ணயித்த இலக்கை எட்டுவது கடினம் என்று மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை பசுமை தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது.

தரமான காற்றுக்கான 180 நாடுகள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இந்தியாவில், காற்று மாசு கட்டுப்பாட்டிற்காக தீர்ப்பாயம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக நவம்பர் 2020க்குள் நாடு முழுவதும் காற்றின் தரத்தை கண்காணிக்கும் 122 மையங்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன். இதற்கான பணிகள் ஆறு மாதங்களுக்குள் முடுக்கி விடப்பட்டு முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மிகப் பெரிய பின்னடைவாக, எட்டு மாநிலங்களில் உள்ள 46 நகரங்களில் மட்டும்தான் இந்த மையங்கள் அமைப்பதற்கான முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஒரிஸா போன்ற காற்று மாசு அதிகம் கொண்ட மாநிலங்கள், தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டுள்ளதால், தீர்ப்பாயத் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில திருத்தங்கள் செய்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் பல்வேறு காரணங்களைக் காட்டி கிடப்பில் போடுவதை மன்னிக்க இயலாது என்று மத்திய சுற்றுச் சூழல் துறையை தீர்ப்பாயம் கடுமையாக சாடியுள்ளது. மேலும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்தால், தற்போதுள்ள சூழலை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் மேம்படுத்துவது என்பது மிகக் கடினமானதாகி விடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான வகையில் காற்று மாசு அதிகரித்திருப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, ”இதற்கு மேலும் சகித்துக்கொண்டிருக்க முடியாது” என்றும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நிதி ஆயோக் மூலம் அவசரத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாட்டில் மூன்று பங்கிற்கும் மேல் நகரங்களிலும் சிற்றூர்களிலும் எரிவாயு சேம்பர்கள் அமைக்க முடியும்போது, ஏன் குறிப்பிட்ட 122 நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்பது தான் பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது. மாசுக் கட்டுப்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை நகரங்களில் செயல்படுத்த முயன்ற மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தற்போது, தனது பொறுப்புக்களை அப்படியே மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களிடம் கைமாற்றி விட்டிருக்கிறது.

பொறுப்பைத் தள்ளிவிடும் இந்த விளையாட்டால், குழப்பமான சூழல் உருவாகி, எந்த நடவடிக்கையை யார் எடுப்பது என்ற சலசலப்பு உண்டாகியுள்ளது. அத்துடன் சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் இல்லாமல், அந்தந்த நேரத்தில் என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்ற தெளிவில்லாமல் பல்வேறு துறைகள் மெத்தனமாக உள்ளன. இந்தச் சூழலில் தேசியத் தீர்ப்பாயத்தின் அவசரகால திட்டங்களை எப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும்?

இதே சூழ்நிலையை தங்கள் நாட்டில் எதிர்கொண்ட அமெரிக்கா, ”அவசர காற்று சுத்தத் திட்டம்” என்ற ஒரு கடும் சட்டத்தை இயற்றி, விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, அதை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், 1970ஆம் ஆண்டு முதல் கார்பன்-டை ஆக்ஸைடு, சல்பர் -டை ஆக்ஸைடு உள்பட ஆறு வகையான மாசு உமிழ்வுக் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதால், அங்கு காற்று மாசு 77 சதவிகிதம் குறைந்துள்ளது. இது அந்நாட்டின் பாரபட்சமில்லாத நடவடிக்கைகளால் சாத்தியமானது.

ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், ஃப்ரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாகனங்களில் மாசு அதிகமாக இருந்தால் மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. காட்டுப் பகுதிகளில் மாசு பரவாத வண்ணம் தொழிற்சாலைகளில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது.

மேற்கண்ட அத்தனை நடவடிக்கைகளும் வெறும் ஆவணங்களில் மட்டுமே இந்தியாவில் உள்ளன. முறையாக அவற்றை செயல்படுத்தாமல் போனதால், இன்று நிலைமை கைமீறியிருக்கிறது. காற்று மாசு ஏற்படுத்தும் ஆலைகளை நகரங்களில் இருந்து வெகுதொலைவில் மாற்றி, குடியிருப்புக்களை அலுவலகங்களுக்கு அருகிலேயே அமைத்து விட்டால், தொழிற்சாலை மாசு, போக்குவரத்தால் ஏற்படும் மாசுக்களை எளிதாக கட்டுப்படுத்தி, தரமான காற்றை மேம்படுத்தலாம்.

ABOUT THE AUTHOR

...view details