புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் அதற்கேற்ப மாநில தேர்தல் ஆணையரை உடனடியாக நியமனம் செய்வதற்கான பணிகளை தொடங்க வேண்டும் இதற்கு மேல் அவகாசம் அளிக்க முடியாது என நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து 2019 ஜுலை மாதம் மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்வது தொடர்பான அறிக்கையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி கிரண்பேடி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ததோடு புதிதாக பாலகிருஷ்ணன் என்பவரை தேர்தல் ஆணையராக நியமனம் செய்தார்.
இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 18ஆம் தேதி உத்தரவு ஒன்றை அனுப்பியது. அதில் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. கிரண்பேடி அதன்படி கடந்த மாதம் 20ஆம் தேதி மத்திய அரசின் கடிதத்தை மேற்கோள்காட்டி ஏற்கனவே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணனின் நியமனம் செல்லாது எனவும் உரிய விதிகளைப் பின்பற்றி புதிதாக தேர்வு செய்யுமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.