கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மருந்தகங்கள், மளிகைக் கடை, இறைச்சிக் கடை, பால் விற்கும் கடை உள்ளிட்டவற்றை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, திறக்கப்படும் கடைகளில் விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்குப் பொருட்களை விற்பதாக நாட்டின் பல இடங்களில் இருந்தும் புகார்கள் எழுந்தவாறே உள்ளன. ஏற்கனவே, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகளுக்கு வழிகாட்டல்களை வழங்குமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்குக் கோரிக்கை விடுத்து சட்ட மாணவர் அர்ஷிட் ஜெயின் என்பவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.