கடந்த 1992-93ஆம் ஆண்டு பிகார் மாநில முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாகவும், சாய்பாசா கருவூலப் பணத்தில் ரூ.33.67 கோடி மோசடி செய்ததாகவும் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அதில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதையடுத்து லாலுவின் உடல்நிலையைக் காரணம் காட்டி பிணை வழங்க வேண்டும் என, அவரது குடும்பத்தினர் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனு, செப் 11ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, இறுதி விசாரணை அக்.9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, ஆர்ஜேடியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்று (அக்.9) நடைபெற்றது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், கால்நடை தீவன வழக்கில் தொடர்புடைய சாய்பாசா கருவூல மோசடி வழக்கில் அவருக்கு பிணை வழங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், தும்கா கருவூல மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதால், லாலு சிறையில் இருந்து வெளியில் வரமுடியாத நிலை உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள சூழலில் லாலு பிணையில் வெளிவந்தால், அது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.