லடாக்கில் 'லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்' எனப்படும் இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருநாட்டுப் படைகளுக்கும் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது.
இந்நிலையில், இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து லடாக் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இதற்கிடையே, திபெத்தை (சீனப் பகுதி) ஒட்டியுள்ள இமாச்சலப் பிரதேசத்தின் கின்நௌர், லாஹுல்-ஸ்மித் ஆகிய எல்லை மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் குஷால் ஷர்மாவிடம் கேட்டபோது, "லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பயங்கர மோதல் நிலவிவருவதைக் கருத்தில்கொண்டு, கின்நௌர், லாஹுல்-ஸ்மித் மாவட்ட அலுவலர்கள் உஷார் நிலையில் இருக்குமாறும், உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.