மத்திய ரிசர்வ் காவல் துறையில் 207 கோப்ரா படையைச் சேர்ந்தவர், கமாண்டோ சச்சின் சாவந்த். ஏப்ரல் 23ஆம் தேதி சச்சின் சாவந்த் எக்சாம்பாவில் உள்ள, தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த சதல்கா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சச்சின் சாவந்தின் பேச்சைக் கூட கேட்காமல், காவல் துறையினர் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். கமாண்டோ சச்சின் சாவந்த் தன்னை தாக்கிய காவல் துறையினரை, தனது பின்னுக்குத் தள்ளுகிறார்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த காவல் துறை அலுவலர்கள் கமாண்டோ சச்சினை அடித்து, அவரது கையில் விலங்கிட்டு, வெறுங்காலுடன் சதல்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவர் மீது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகவும், அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் மத்திய ரிசர்வ் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் சஞ்சய் அரோராவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையின் இந்த செயலைக் கண்டித்து, கர்நாடக காவல் துறை தலைமை இயக்குநர் பிரவீனுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.