மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷண் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரியில் படித்த முதல் பெண்மணி கிருஷ்ணம்மாள் ஆவார். இவர் தொடர்ச்சியாக நில உரிமை சார்ந்து இயங்கி வந்தவர். 1968ஆம் ஆண்டு நடந்த கீழ் வெண்மணி படுகொலைக்கு பிறகு உழவனின் நில உரிமை இயக்கத்தை கட்டமைத்தவர். தன்னுடைய நில உரிமை அமைப்பின் மூலமாக பட்டியலின விளிம்புநிலை மக்களுக்கு 2,500 வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.