புதுச்சேரி அமைச்சர்களின் அலுவலக செலவுக்கு அரசு சார்பு நிறுவனங்கள் முறைகேடாக பணத்தை செலவு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவலை பெற்றுள்ளார். அதில் வருவாய்த்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு அரசு நிறுவனமான பிப்டிக் நிறுவனத்தின் பணத்தில் எழுதுபொருட்கள், நாற்காலி, எலக்ட்ரானிக் ஸ்டவ், வேக்வம் கிளீனர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியிருப்பதாகவும், சமூகநலத்துறை அமைச்சர் அலுவலத்திற்கு டீ வாங்குவதற்காக, கடந்த நான்கு மாதங்களாக அரசு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனத்திலிருந்து 15 ஆயிரத்து 980 ரூபாய் செலவு செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து புதுச்சேரி அமைச்சர் அலுவலகங்களுக்கு விதிமுறைகளை மீறி, அரசுத் துறை மற்றும் சார்பு நிறுவனங்களின் நிதி செலவு செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோருக்கு ஆதாரத்துடன் மனு அனுப்பி உள்ளது.