புதுச்சேரியில் அரசு அமுதசுரபி பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் அமைச்சர்களின் கார்களுக்கு கடனில் எரிபொருள் நிரப்புவது வழக்கம். ஆனால், இதன் கடன் பாக்கி மட்டும் இரண்டு கோடியே 30 லட்ச ரூபாயாகும். இதனால் அமைச்சர்களின் கார்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது என அரசு நிறுவனமான அமுதசுரபி அறிவித்துள்ளது.
இதனையறியாத கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தனது காருக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சரின் கார் ஓட்டுநர், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அமைச்சரவைக் கூட்டத்திற்கு காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு அரசுப் பேருந்தில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் சென்றுள்ளார். பேருந்தில் அமைச்சர் பயணம்செய்தது குறித்து ஆளுநர் கிரண்பேடி அவரது வலைதளப் பதிவில் விமர்சித்துள்ளார்.