தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதைக் கண்டித்து ரத்தன் டாடா ட்வீட்

கேரளாவில் அன்னாசிப் பழத்தில் வெடி மருந்து வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ட்வீட் செய்துள்ளார்.

By

Published : Jun 4, 2020, 8:18 PM IST

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 27ஆம் தேதி அன்று சைலண்ட் வேலி வனப்பகுதியில் உயிரிழந்த இந்த யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடி மருந்துகள் வைத்து உணவளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து கர்ப்பிணி யானை அப்பழத்தை உண்ட போது வெடிமருந்து வெடித்ததில், அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தினால் ஏற்பட்ட கடும் வலியுடன் வெள்ளாறு நதியில் இறங்கிய யானையை கும்கி யானையைக் கொண்டு மீட்கப் போராடியும் அது அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து ஆற்றிலேயே நீண்ட நேரம் நின்ற அந்த யானை, மே 27ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இச்செய்தியை கேரள வனத்துறை அலுவலர் மோகன் கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளையும் கணடனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், "வெடி மருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை, ஒரு குழு, ஏதுமறியா அப்பாவி ஜீவனான கர்ப்பிணி யானைக்கு அளித்து மரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்னை வருத்தத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது" என டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா ட்வீட் செய்துள்ளார்.

மேலும், "அப்பாவி விலங்குகளுக்கு எதிரான இத்தகைய குற்றச் செயல்களுக்கும், திட்டமிடப்பட்ட கொலைகளுக்கும் வேறுபாடு இல்லை, இந்த சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றும் விலங்குகள் ஆர்வலரான ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரமான கொலை சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கேரள மாநிலத்திடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.

இதையும் படிங்க:கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கு: விசாரணையைத் துரிதப்படுத்தும் வனத் துறை

ABOUT THE AUTHOR

...view details