கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வான காங்கிரஸின் ராஜீவ் கவுடா, பி.கே. ஹரிபிரசாத், பா.ஜனதாவின் பிரபாகர் கோர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் (ஜே.டி.எஸ்) குபேந்திரா ரெட்டி ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 25ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது.
இதையடுத்து காலியாகவுள்ள நான்கு பதவிகளுக்கும் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (77) இன்று (திங்கள்கிழமை) தனது வேட்புமனுவை, கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் முன்னிலையில் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநிலத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கட்சி மேலிடம் கடந்த 5ஆம் தேதியே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.