இடுக்கி (கேரளா):கனமழையின் காரணமாக நிலச்சரிவில் சிக்கியதில், இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 24 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பெய்துவரும் கனமழையால், ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர் குடியிருப்பு முகாமில் தங்கியிருந்த 80க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கியதாகக் கூறப்பட்டது. இத்தகவல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மியான்மரில் நிலச்சரிவில் சிக்கிய 50 பேர் பலி?
தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் 2 நாட்களாக தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நண்பகல் நிலவரப்படி மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட 12க்கும் மேற்பட்டோர் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 24 பேரை தேடும் பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது.
தேயிலைத் தோட்ட அமைப்புகள், உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் இணைந்து காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் மீட்புப்பணி நடைபெற்றுவரும் சூழலில், மண்ணிற்கு அடியில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அலுவலர்கள் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர்.
இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவு ஏற்பட்ட பெட்டிமுடி பகுதி தேயிலைத் தோட்டங்களில் தங்கி, பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதில் 55 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் போனதால், உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். கயத்தாரில் இருந்து 40 பேர் உடனடியாக இ-பாஸ் பெற்று கேரளா விரைந்துள்ளனர்.
இமாச்சலில் கன மழை: சாலைகள் துண்டிப்பு!
சின்னாறு சோதனைச்சாவடியில் கேரள காவல் துறையினர் அனுமதிக்க மறுப்பதாகவும், கரோனாவைக் காரணம் காட்டி, தாங்கள் செல்லும் முன் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது எனவும் உறவினர்கள் கோருகின்றனர். மீட்புப்பணி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள இடுக்கி மாவட்ட நிர்வாகம், கூடுதலாக 2 தேசியப் பேரிடர் மீட்புக்குழுவை வரவழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சமும், மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாயும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.